லண்டனில் கத்திக்குத்துக்கு பலியான மூவரும் இந்தியர்கள்

நேற்று முன் தினம் லண்டனையே உலுக்கிய கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மூவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. நேற்று முன் தினம் கிழக்கு லண்டனிலுள்ள செவன் கிங்ஸ் என்ற இடத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது குத்தப்பட்ட மூவரும் இரத்த வெள்ளத்தில் பலியாகியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மூவரும் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் என்றும், கட்டிடத்தொழிலாளிகள் என்றும் தெரியவந்துள்ளது. தங்கள் வேலைக்கு சம்பளம் கொடுக்கப்படாததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகி கொலையில் முடிந்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் நரிந்தர் சிங் (26), ஹரிந்தர் குமார் (22) மற்றும் பல்ஜித் சிங் (34) என்று தெரியவந்துள்ளது. ஒருவர் கழுத்து, தோள்பட்டை மற்றும் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், மற்றொருவரின் தலை சுத்தியலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட ஒருவர் ‘அவர்கள் என்னைக் கொன்றுவிட்டார்கள், எனக்கு உதவுங்கள்’ என கதறியதை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
சீக்கியர்களின் இரண்டு குழுக்கள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு சம்பளம் தராததற்காக சண்டையிட, போதையில் கைகலப்பாகி மூவர் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்கள். தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 29 மற்றும் 39 வயதுடைய இருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக உயிரிழந்தவர்களில் ஒருவரான குமாரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.