கொடிய கொரோனா வியாதியால் ஸ்தம்பித்துப் போயிருக்கும் சீனாவில் தற்போது ஆபத்தான பறவை காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஷாயாங் நகரத்திற்கு அருகில் பண்ணை ஒன்றில் இந்தப் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. குறித்த விவகாரம் தொடர்பில் சீனாவின் வேளாண் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 7,850 கோழிகளில் 4,500 கோழிகளை பறவை காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஊழியர்கள் கொன்றுள்ளனர். மேலும் உள்ளூர் அதிகாரிகள் கிட்டத்தட்ட 20,000 பறவைகளை அதன் நோய் தொற்றை கட்டுப்படுத்து நோக்கில் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
H5N1 என்பது பறவை காய்ச்சல் வைரஸ் ஆகும், இது பறவைகளில் கடுமையான சுவாச நோயை ஏற்படுத்துகிறது, மேலும் இது மனிதர்களுக்கும் தொற்றும் தன்மை கொண்டது. 1990 களின் பிற்பகுதியில் ஹாங்காங்கில் மனிதர்களுக்கு இந்த நோய் பரவியதில் இருந்து 350 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
ஹுனான் மாகாணமானது வடக்கே ஹூபே மாகாணத்தின் எல்லையாக உள்ளது, அதன் தலைநகரான வுஹான் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாக உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உலகெங்கிலும் 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இதில் சீனாவில் மட்டும் 260 நோயாளிகள் இறந்துவிட்டதாகவும் கிட்டத்தட்ட 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, வெளிநாட்டில் எந்த நோயாளிகளும் இந்த வியாதி தொடர்பில் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.