News

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் பலி!

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் சில கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் இந்த வைரஸின் தீவிரத்தை தெரியாமல், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1417-ஆக உள்ளது, இதன் மூலம் உலகில் 24 மணி நேரத்தில் அதிக உயிரிழப்பை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-யும் தாண்டி 10,328 ஆக உள்ளது.  இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பொது சுகாதார அதிகாரசபையின் தலைவர் ஜெரோம் சாலமன் கூறுகையில், இதில் இறந்தவர்களில் மருத்துவனைகளில் மட்டும் இதுநாள் வரை 7,091 பேர் எனவும் மற்றவர்கள் நர்சிங் ஹோம்களில் இறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய புள்ளி விவரங்கள் மூலம் இறந்தவர்களின் சதவீதம் 16-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் திங்கட் கிழமை 10 சதவிதமும், ஞாயிற்றுக் கிழமை  7 சதவீதமுமாக இருந்தது. இதன் மூலம் கொரோனாவால் 10,000-க்கும் மேற்பட்ட உயிர்களை கொடுத்த நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெளிப்புற உடற்பயிற்சிக்கு பகல்நேர தடை(Daytime Ban On Outdoor Exercise) விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் பாரிஸில் வெளியில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் மக்கள் காலை 10 மணிக்கு முன் அல்லது இரவு 7 மணிக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவும் அபாயங்களைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ மற்றும் பாரிஸ் காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளன.

ஏப்ரல் 8, 2020 முதல், பாரிஸ் பிரதேசம் முழுவதும் தனிப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகளுக்கான பயணங்கள் இனி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அங்கீகரிக்கப்படாது. ஆகவே, இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை, தெருக்களில் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும்போது அவை அங்கீகரிக்கப்படுகின்றன என பாரிஸ் மேயர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Latest News

To Top