News

இலங்கைக்கு உதவிகளை நிறுத்துமாறு ஜஸ்மின் சூக்கா கோரிக்கை

மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அடம்பரகே றுவான் பிரசன்ன ஜெயக் டி அல்விஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த வெள்ளிக்கிழமை குற்றவியல் விசாரணைப் பிரிவின் (சி.ஐ.டி.) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெயர்போன சித்திரவதையாளர் எனச் சொல்லப்படும் ஒருவர் சி.ஐ.டிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமையால் அந்தப் பிரிவுக்கான சர்வதேச உதவிகள் உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கோட்டாபயவுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு 11 தமிழர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உட்பட சித்திரவதை தொடர்பான பல நீதிமன்ற ஆவணங்களிலும் பிரசன்ன டி அல்விஸின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அல்விஸ் உட்பட வேறு பல அதிகாரிகளின் விவரங்களைக் கொண்ட 13 பக்க ஆவணக்கோவை ஒன்று சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தடுத்து வைக்கப்பட்ட பலரும் பிரசன்ன டி அல்விஸ் தம்மை சித்திரவதை செய்ததாக அல்லது அதில் தொடர்புபட்டிருந்ததாக அவரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரசன்ன டி அல்விஸ் கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் விசுவாசமானவராக இருந்துள்ளார். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அல்விஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இருந்ததுடன் அவருக்கான கட்டளைகளை கோட்டாபய ராஜபக்சவே நேரடியாக வழங்கினார்.

பிரசன்ன டி அல்விஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் இருந்த போது ரி.ஐ.டியினரால் திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட சித்திரவதைகள் ‘சித்திரவதைக்கு எதிரான விசேட பிரதிநிதிகள்’ மற்றும் 2015 இல் இலங்கை பற்றிய விசாரணை அறிக்கை உட்பட பல ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் காலப் பகுதியில் ரி.ஐ.டியினால் பயன்படுத்தப்பட்ட மிருகத்தனமாக சித்திரவதை முறைகள் பற்றியும் அடுத்தடுத்து வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் பற்றிய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

5 நாடுகளில் ரி.ஐ.டியின் சித்திரவதைகளில் இருந்து உயிர்தப்பிய 73 பேரை செவ்விகண்டு அவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு 2019ஆம் ஆண்டு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மோசமான பொலிஸ் அணி என்ற தலைப்பிலான ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.

இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்பு என்பதற்கு இந்த மனிதர் ஒரு அடையாளமாகும். சித்திரவதைக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதை உறுதி செய்யும் கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு உண்டு. அதன் சர்வதேச உறுதிப்பாடுகளுக்கு அமைய சித்திரவதையாளர்கள் பொது பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் வடிகட்டப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு இலங்கைக்கு உண்டு.

கலிபோனியாவில் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்த கனடாப் பிரஜையான றோய் சமதானம், 2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ரி.ஐ.டியினரின் தடுப்பில் இருந்தபோது பிரசன்ன டி அல்விஸ் மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் தன்னைப் பற்றி இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை தான் தற்செயலாக கேட்டதாக நீதிமன்றத்துக்கான தனது சமர்ப்பித்தலில் தெரிவித்திருந்தார்.

பின்னர் அன்றைய தினம் மாலைவேளையில் ரி.ஐ.டி. அதிகாரிகளால் மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாக இடதுகை மணிக்கட்டில் வீக்கம், முழங்காலில் காயம், வயிறு மற்றும் ஆணுறுப்பு பகுதியில் வலியும் அவருக்கு ஏற்பட்டது. அடுத்தநாள் காலையில், முதல்நாள் இரவு என்ன நடந்தது என பிரசன்ன டி அல்விஸ் றோயிடம் கேட்டார். அதன் பின்னர் அடிக்கப்பட்டது பற்றி செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சொல்லக்கூடாது என்று எச்சரிக்கை செய்த அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டால் மேலும் அடிக்காமல் விடுதலை செய்யப்படுவாய் எனவும் கூறினார்.

சட்டத்தரணி ஒருவரைத் தான் பார்க்க விரும்புவதாக றோய் பிரசன்ன டி அல்விஸிடம் கேட்டார். அதற்கு ‘நீ சட்டத்தரணியை வைக்க முடியாது. இங்கு எவரும் உனக்கு உதவி செய்ய முடியாது’ என்று பதிலளித்தார். 2016 இல் ரி.ஐ.டியின காவலில் வைக்கப்பட்டு அவர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஒரு முறைப்பாட்டில் வெற்றி பெற்றார். அத்துடன் அவருக்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கட்டளையிடப்பட்டது. ஆனால் அதற்கு இலங்கை அரசு இணங்க மறுத்துவிட்டது.

வெற்றிவேல் ஜசிகரன் மற்றும் அவரது துணைவியார் வளர்மதி வடிவேலு மற்றும் ஜெயப்பிரகாஸ் சிற்றம்பலம் திஸாநாயகம் உட்பட பல பத்திரிகையாளர்களினுடைய அடிப்படை உரிமைகள் மனுக்களில் பிரசன்ன டி அல்விஸ் இனுடைய பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட, 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணையில் அவரது பங்கு குறித்து அல்விஸ் விசாரணை செய்யப்பட்டார்.

ரி.ஐ.டியின் கொலைக்காக 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான கந்தகெதர பிரியவன்ச 2016ஆம் ஆண்டு திறந்த நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை அளித்தார். இதில் லசந்தவின் கொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைச் சிக்கவைப்பதற்காக ஒரு வாக்குமூலம் வழங்ககுமாறு அல்விஸ் தன்னை நிர்ப்பந்திக்க முயற்சி செய்ததுடன் தன்னை அரச சாட்சியாளராக்குவதுடன் தனக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.

கைதிகளைக் கயிற்றால் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுவதற்குப் பயன்படுத்துவதற்கு இரும்பு வளையையும் சித்திரவதைகளுக்கான உபகரணங்களையும் கொண்ட கொழும்பிலுள்ள ஒரு விசாரணை அறையைப் பற்றி ரி.ஐ.டியினால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விபரித்தார்கள். நிர்வாணமாக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் கைதிகள் அந்த அறைக்குள் கொண்டு செல்லப்படுவதைத் தான் பார்த்ததாகவும், அத்துடன் அல்விஸ் சில சமயங்களில் அந்த அறைக்குள் போவதுடன் கைதிகளிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தனக்கு கீழ் இருந்த அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

எல்லோரும் அல்விஸை ‘கோட்டாபயவின் ஆள்’ என்றே குறிப்பிட்டார்கள். அத்துடன் இதன்விளைவாக அவரைவிட மூத்த அதிகாரிகள் அல்விஸிற்கு அடங்கியே நடந்து கொண்டார்கள் எனத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ரி.ஐ.டி. அவரது கட்டுப்பாட்டின் கீழே இருந்தது, இப்போது ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் பதவியுயர்த்தப்பட்டு வருகின்றமையானது இலங்கையைக் கையாளும் அனைவருக்கும் கரிசனையை ஏற்படுத்த வேண்டும்.<

இலங்கை சி.ஐ.டியினர் அமெரிக்காவின் எந்த உதவிகளையும் பெற்றுக்கொள்ளாத வகையில் லியேகி சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்கிவரும் பிரிட்டன் அரசும் சி.ஐ.டியினருக்கான எல்லா நிகழ்ச்சித் திட்டங்களையும் நிறுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இதனைவிட போதை மருந்துகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிரான ஐ.நா. அலுவலகம் மற்றும் ஐ.நா. அமைதிகாக்கும் பணி உட்பட ஐக்கிய நாடுகளின் அனைத்துப் பிரிவுகளும் சி.ஐ.டியினருக்கு எதிராக ஒரே மாதிரியான வடிகட்டல் கொள்கையைக் பயன்படுத்த வேண்டும்” – என்றுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top