News

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மே 18

தமிழர் விடுதலைப் போராட்டம் அற வழியிலும், பின்னர் ஆயுத வழியிலும் பெருநீட்சி கண்டு, தமிழீழ நிழலரசு உருவானது.

உலகப் பந்தில் வெளி உள் அரசியல் நகர்வுகளில் உலக நாடுகளின் மூலோபாயங்கள் தமது நலனை அடிப்படையாக்கி கொண்டு, பழிவாங்கல் உட்பட இணைந்து சிறுநிலப்பரப்பில் சொற்களால் எடுத்துரைக்கமுடியாத பேரிடராக வன்கொலைகள் நடந்தேறி ஈழத்தமிழர் ஆயுதப் பேராட்டம் மே 18இல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் வளர்ந்த நாடுகளில் அனைத்தும் இருந்தும், நாம் எதிர்கொண்ட கடந்த இரண்டு மாத வாழ்க்கைச் சூழல், எமக்குச் சவாலாகத் தெரிந்தது.  உணவு, உறைவிடம் உட்பட மனித வாழ்வின் அடிப்படையாவும் இழந்து 2009 மே மாதத்தில் எமது தாயகத்தில் எம் தமிழர் வதைக்கப்பட்ட செயலை எவ்வுவமை கொண்டு எழுதுவது.

பெருவடு, பெரும் துன்பம்! அழுது தீர்க்க முடியாது, சொல்லில் வடித்துக்காட்ட முடியாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர், கடந்த நெருப்பு, கடக்க முடியாது சுருண்டு மடிந்த பொழுது… எட்டுக்கோடி தமிழர்கள் யாரும் ஏதும் செய்ய முடியாது மௌனமான நேரம்… புலத்தில் தமிழர் உலகம் முழுவதும் முழுதும் முயன்றும் தடுக்க முடியாதுபோன பேரவலம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை!

அன்று 2009இல் உலக அரங்கில் ஈழத்தமிழர் எமது அரசியல் வலுவால் சிங்களப் பேரினவாம் நடத்திய இனப்படுகொலையைத் தடுக்க முடியவில்லை. ஆக நாம் வாழும் நாடுகளில் எமது அரசியல் உரிமை வலுவை வளர்க்க வேண்டும், பிள்ளைகளுக்கு தமிழர் கடந்து வந்த இன்னலை எடுத்துச் சொல்லுங்கள், எம் இனத்தின் தடத்தை விளக்கி நில்லுங்கள்.

மேத்திங்கள் 18ம் நாள் தமிழர்கள் அனைவரது வீடுகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்து இனத்தின் துன்பத்தை உணர்ந்து தலையை நிமிர்த்துவோமாக.< நாளும் நாங்கள் பட்ட வலிகளை, படுமிடரை பல் மொழிகளில் உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள். பெற்ற பிள்ளைகளுக்கு உயிரைக் கொடுத்து போராடிய வீரர்கள் வரலாற்றை விளக்கிச் சொல்லுங்கள். வீரர்கள் நினைவை, மக்களின் அழிவை நினைவில் அவர்தம் கனவை நோக்கி நகர்த்துங்கள்.

10 ஆண்டுகள் கடந்து போய்விட்டது. 11வது ஆண்டு நினைவினை ஏந்தி தமிழினம் இன்று விம்முகின்றது. தொடர்ந்து ஆண்டுகள் தோறும் நினைவினைமட்டும் ஏந்துதல் போதாது. எம் தமிழினம் கல்வியில், செல்வத்தில், அறிவுடன் வீரத்தில் சிறந்து விளங்க வேண்டும். தமிழர் தாயகத்தில் அல்லல் போக்கி உரிமை நாட்டும் கைகளாக உலகத் தமிழர்கள் ஊழியம் ஆற்ற வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகப் பிரபாகரன் என்றொரு முகம் ஆயுதப்போராட்டத்தால் ஒளிர்ந்தது. இன்று முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று 11 ஆண்டுகள் கடந்தபின் நாம் முகமிழந்து நிற்கின்றோம், இதுவரை இனப்படுகொலைக் குற்றவாளிகள்  தண்டிக்கப்படாததும், குறைந்த அரசியல் உரிமையினைத் தன்னும் இன்று தமிழர்கள் தரப்பு என முன்னிற்கும் தமிழரசியல் வாதிகள் பெற்றுக் கொள்ள முடியாததும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் திசைக்கொருவராக பிரிந்து நிற்பதும் இன நலனிற்கு கேடானது.

இனத்தின் இறையாண்மை என்பது ஒரு கூட்டு இறையாண்மை ஆகும். தேசிய இனத்தின் இறையாண்மையை மறுப்பது என்பது அந்த இனத்தின் ஒவ்வொரு மனிதனின் இறையாண்மையை மறுப்பது ஆகும். இது குடியாட்சியின் விதியை மறுப்பதாகும். ஒரு தனிமனிதனுக்கு தீர்மானிக்கும் உரிமை அல்லது தன்னுரிமை உண்டு என்றால், அதே உரிமை அந்த தேசிய இனத்துக்குண்டு. இதை உலகப் பிரகடனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆகவே நாம் சிதைக்கப்பட்டதும், நாம் இழந்துபோனதும் நாடுதான். எமது இறையாண்மை உரிமையினை அல்ல… அன்புத்தமிழ் உறவுகளே, நாம் எமது தாயகக் கனவினைக் தலைமுறைகள் தாண்டிக் கடத்த வேண்டும். எமது உரிமை அறிந்து நாம் அறப்போர் அறிவால் ஆற்ற வேண்டும்.

தன்னாட்சி ஒரு முடிவைத் தாமாகவே முன்வந்து எடுக்கும் உரிமையுள்ள நிலையினை இது குறிக்கின்றது. இவ்வுலகின் தன்னாட்சி உரிமை கொண்ட மக்கள் விடுதலையாகவும் தம் விருப்பத்திற்கேற்ப தம் முடிவுகளை எடுக்கும் இயல்பு கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். ஐரோப்பிய நாட்டினர் காலனித்துவத்தை உலகின் பல் நாடுகளுக்கும் பரப்பிய 16ம் நூற்றாண்டுக்கு முன் இறையாண்மை என்ற சொல் இருந்ததில்லை. நாடுகள் உருவான போது உடன் உருவான சொல் இறையாண்மை ஆகும்.

இறையாண்மை என்பது நாடுகளுக்குத்தான் உண்டு. ‘நாடு’ என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லாக அன்று இருந்தது. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியதல்ல, உண்மையில் இறையாண்மை மக்களிடம் தான் இருக்கின்றது.

தமிழர் இறையாண்மை பாரதக்கண்டத்தில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் 1947ல் முடிவடைந்தது. வேற்றார் காலனிய ஆதிக்க வெளியேற்றம் நடைபெற்று, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கட்டாயமாக இணைக்கப்பட்ட பல தனியரசுகளும், இந்தியா என்ற பெயரில் தொடர்ந்து வல்லிணைக்கப்பட்டுள்ளனர். மேற்குல நாடுகளைப்போல் அல்லாது தமிழ்த் தேசிய இனம் ஒரு நீண்ட கால இருப்பையும் வரலாற்றையும் கொண்டது.

மூவேந்தர் காலத்தில பேரரசு கொண்ட தமிழினம், 1801ல் தமிழகமாக இந்தியாவுடன் இணைக்கபட்டுள்ளது. பாரதப் பெருங்கண்டத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரிடம் இழந்த தேசிய இன இறையாண்மையினை தமிழர்கள் மீண்டும்பெறவில்லை.

ஈழத் தமிழ்த் தேசிய இனம், சிங்களத் தேசிய இனம் ஆகியவை இலங்கையிலே தனித்தனியே ஆனால் ஓர் அரசின் கீழ் இருந்து வருகின்றன. 1948இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது முதல், பௌத்த சிங்கள இனவெறித் தேசிய சிங்கள அரசு, ஈழத்தமிழர் மீது இனப்படுகொலையை பலமுறை நிகழ்த்தி கடந்த 2009 மே 18ஆம் நாள் மானிடம் வெட்கித் தலைகுனிய கொலைக் களத்தில் தமிழர் குரலை மௌனிக்க வைத்துள்ளது.

இலங்கையின் வந்தேறியான விஜயன் இலங்கைக்கு வரும் முன்னரே இலங்கையில் சீர்மிகு பண்பாட்டுடன் வாழ்ந்து வந்த ஈழத்தமிழர்கள் 17ஆம் நூற்றாண்டில் தனியரசு இழந்தனர். 1619இல் யாழ் இராச்சியத்தன் தமிழ் மன்னன் சங்கிலியன் போரில் வெல்லப்பட்டு, தமிழர் இறையாண்மை போர்த்துக்கேயர்களால் கைக்கொள்ளப்பட்டது. 1815ல் ஆங்கிலேயர் கண்டித் தமிழரசையும் வென்று தமிழர் இறையாண்மையைக் கைக்கொண்டார்கள். 1833இல் தமிழர் தாயகம் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயரால் ஒரு நாடாக உருவாக்கப்பட்டது

1948இல் இலங்கை விடுதலை பெற்றபோது ஈழத்தமிழர் இறையாண்மை எமக்கு திருப்பி கிடைக்கவில்லை. ஈழத்தில் 1956ல் தமிழரசுக் கட்சியை தந்தை செல்வா உருவாக்கி, ஒரு கூட்டாட்சி கோரிக்கையை அறவழியில் முன்வைத்தார். இது 1972லும் ஏற்கப்படவில்லை. 1972ல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து «தனிநாடு» கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கேசன்துறையில் வெற்றி பெற்றார். 1976இல் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை வென்றெடுக்வே «தமிழர் விடுதலைக் கூட்டணி» உருவாக்கப்பட்டது

. 1976ல் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1977ம் ஆண்டுத் தேர்தலில் “தமிழர்க்குத் தனிநாடு” என்ற கோரிக்கையை ஆதரித்து 19க்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, ஈழத்தமிழர் தம்முடைய கருத்தை குடியாட்சி முறைப்படித் தெரிவித்தனர். ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். அது கோரும் தீர்வு தமிழீழம் ஆகும் என்பது இத்தால் உலகப்பொதுச் சட்டத்தின்படி வரையறுத்துக்காட்டப்பட்ட நிகழ்வாகும்.

அறவழிப்போராட்டங்கள் கொடிய அரச பயங்கரவாதம் கொண்டு அடக்கப்பட்டபோது ஆயுதப்போராட்டம் பிறப்பெடுத்து விரிவடைந்து, தமிழர் இராணுவ பலம் ஈழ விடுதலைநோக்கி நகர்ந்து தமிழீழ நிழலரசாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலமையில் வளர்ச்சி கண்டது. 2005ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியினை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கி தனி ஈழம் கோரும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈழ மக்களால் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

தனித் தமிழ்ழீழம் என்பது தந்தை செல்வாவால் முன்னிறுத்தப்பட்டு அவ்வப்போது ஈழத்தமிழ் மக்களால் குடியாட்சி முறைப்படி ஏற்பளிக்கப்பட்ட அரசியல் தீர்வாகும். இன்றுவரை எவ்வித அரசியல் தீர்வினையும் ஈழத்தமிழ் மக்களுக்கு எவரும் வழங்கவில்லை. இறையாண்மை பெயரால் உண்மையான தேச இறையாண்மையை மறுப்பது, குடியாட்சியின் பெயரால் குடியாட்சி உரிமையினை வதைப்பது என்பது நீண்டகாலம் தொடர முடியாது.

அறத்தின் வழி உலக அரசியல் அறிவியல் வழிநின்று தமிழர்கள் தமது உரிமைக்காக உழைக்கும்போது பொய்மைகள் தகர்ந்து போகும். நாடு அழியலாம், இனத்தின் இறையாண்மை அழியாது! தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேசிய இனமக்களுக்கே இறையாண்மை உடைமையானது என்பதும் தான் இன்றைய உலகளாவிய அரசுமுறைகளின் சாரமாகும்.

பல் தேசிய பல்லினங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில், ஒரு தேசிய இனம் தனது மொழி, பண்பாடு, இனநலன் ஆகியவை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், இறையாண்மையைக் கையிலெடுத்துக் கொண்டு தமது தாயகத்தை அப் பல்தேசிய நாட்டிலிருந்து பிரித்துத் தனிதேசத்தைப் படைத்துக் கொள்ளும். இது ஐரோப்பாவில் தோன்றி உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநடைமுறையாகும்.

ஒரு பல்தேசிய நாட்டில் உள்ள தேசிய இனங்கள் தனித்துப் போக விரும்பினால், அதை அனுமதிப்பது தான் குடியாட்சி (ஜனநாயகம்) ஆகும்.  வாக்குரிமை அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உதிரிகளாக உடன் வைத்துக் கொண்டு, குடியாட்சி முத்திரையுடனேயே, ஒரு பெருந்தேசிய இனம் தன் நலத்திற்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைபடுத்துவதும், எதிர்க்குரல் எழுப்பும் தேசிய இனங்களை சட்டங்களின் மூலம், படைபலம் கொண்டு இல்லாமல் செய்வதும் குடியாட்சியின் (ஜனநாயகத்தின்) பெயரால் நடைமுறைப்படுத்தப்படும் கொடுங்கோலாகும்.

இதனை சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததுமுதல் இன்றுவரை நடத்திக்கொண்டிருக்கின்றது. ஒரு இனத்துக்குத்தான் இறையாண்மை சொந்தமானது. அந்த இறையாண்மை, அது வாழும் நாட்டினுடையதாக உணரப்படும். ஒரு இனம் நிலையான நாடு என்பது அழியக்கூடியது, மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது.

ஒர் இனம் தனது நாட்டை இழந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் கூட அதன் இறையாண்மை அதனுடனேயே இருக்கிறது. அந்த இனம் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் போது, அந்த நாடு இறையாண்மை மிக்க நாடாக விளங்குகின்றது. தங்கள் தாயகத்தை இழந்து, உலகம் முழுவதும் உரிமைகள் இழந்தவராகப் பரவிக் கிடந்த யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948ல் வல்லாதிக்க நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் என்ற அதுவரை உலக வரைபடத்தில் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள்.

இஸ்ரேல் இன்று ஒரு இறையாண்மை மிக்க நாடு. இந்த இறையாண்மை, உலக வரைபடத்தில் இல்லாதிருந்த இஸ்ரேலுக்கு எங்கிருந்து வந்தது, அது ஒரு இனத்திற்கே உரித்தான, பிரிக்கவியலாத பண்பு ஆகும். 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமது தாயகக் கனவை சுமந்து வந்துள்ளார்கள் யூதர்கள். இவர்கள் எந்த மொழி பேசி எங்கு வாழ்ந்தாலும் தமது தாயகக் கோட்பாட்டை மறந்ததும் இல்லை, தமது இளம் சமூகத்திற்கு கடத்தத் தவறியதுமில்லை.

இஸ்ரேலிடம் தமது நாட்டை இழந்துவிட்ட பாலஸ்தீனியர்கள், 1967ல் யோர்த்தானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட யோர்த்தான் நதியின் மேற்குக்கரை மற்றும் எகிப்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட காசா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அது ஒரு தேசிய இனமாக ஏற்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அவையில் முழு உறுப்பினராக இல்லாவிடிலும் பார்வையாளர் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் தனது நாட்டைப் பிரகடனம் செய்யும் போது அது ஒரு இறையாண்மையுள்ள நாடு ஆகும். இந்த இறையாண்மை பாலஸ்தீன தேசிய இனத்திடமிருந்து வருகிறது.

மேற்காணும் இவ் உவமைகள் ஈழத்தமிழர் அரசியலிற்கும் பொருந்தும். ஆனால் இவ்விரண்டு நாட்டினரின் சூழலில் நாம் இல்லை என்பது வருத்தமான உண்மை.   இனப்படுகொலையின் 11 ஆண்டுகளைக் கடந்து நினைவேந்தி நிற்கும் இவ்வேளை எமது இனத்தின் உரிமைகளை அறவழியில் வென்றெடுக்க உலகில் உள்ள அனைத்துத்தமிழ் அமைப்புக்களும் செயலாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொய்யும் புனைவும்கொண்ட கதைகளை திரையில் படமாகக் கண்டு நம்பும் சில இளையவர்களுக்கு இரத்தமும் சதையும் கொண்டு ஈகத்துடன் நடந்த ஈழப்போரின் அறம் சரியாகச் சென்றடைந்ததா? அன்று யாழ்ப்பாண இடப்பெயர்விலும், நந்திக்கடலோரம் கொலைக்களத்திலும், இங்கு புலத்திலும் பிறந்த இளையவர்களுக்கு தமிழர் எம் போராட்ட வரலாறு சரியாகச் சென்றடைந்ததா? தமிழ் அமைப்புக்கள் நாம் இதுவரை ஆற்றிய பணிகள் ஏது என சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். மே 18 நினைவுடன் மேலும் மேலும் தமிழர்கள் இணைந்து உழைக்க வேண்டும்.

தேசிய இனங்களும் பிரிந்த நாடுகளும் 2007இல் செர்பியாவிலிருந்து எட்டுலட்சம் மக்கள் தொகை கொண்ட மொன்ரேநேக்கிறோவும், 2008இல் இருபது இலட்சம் மக்கள் தொகையுடன் கொசொவோவும் பிரிந்து சென்று தனித்தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 1923 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியம் இறையாண்மையுள்ள ஓர் நாடாக விளங்கிற்று. தேசிய இனங்களின் இறையாண்மை அரசியல் சட்டப்படியே ஏற்பளிக்கப்பட்டிருந்தது. 1991ல் தேசிய இனங்கள் பிரிந்து இறையாண்மையுள்ள குடியரசுகளை நிறுவிக் கொண்டன.

குடிகளின் அலகுகளாக தேசிய இனங்கள் வளர்ச்சியடைவதும், தங்கள் நாடுகளை நிறுவிக் கொள்வதும், இனநலன் பேண ஓர் அரசை நிறுவிக்கொள்வதும், அதில் தவறும் அரசை தூக்கியெறிந்து மக்கள் நலன் நாடும் அரசை நிறுவிக் கொள்வதும் தற்கால வரலாற்றின் போக்காகும். உலகில் வாழும் தமிழர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும், வேறுபாடுகள் கடந்து ஒரு பொது இலக்கில் இணைய வேண்டும்.

ஒருவரை ஒருவர் குறைசொல்வது கடந்து, எவரையும் எவரும் ஒதுக்காது ஒன்றுபட வேண்டும். உலகப் பொதுமன்றில் ஈழத்தமிழர்கள் உரிமையினை அரசியல் அதிகார வலுவினைக் கொண்டு தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு பெறுதல் வேண்டும். முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பெறுபேறாக சுதந்திர «தமிழீழம்» மலரவேண்டும். தலைகளை நிமிர்த்துங்கள், இலக்கை நோக்கி உழையுங்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top