News

பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிய கூட்டமைப்பு! மகிந்த வழங்கிய உறுதி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சட்ட முறைமைகளை ஆராய்வதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை அலரிமாளிகையிலும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமரிடம் எழுத்துமூல ஆவணம் ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவே இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.

 

 

இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர், “நீண்ட காலமாக சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இவர்களை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்த சட்ட முறைமைகள் என்ன என்பது கவனத்தில் கொள்ள நாம் தயராக உள்ளோம்.

அதேபோல் பொதுமன்னிப்பில் விடுவதென்றால் அது ஜனாதிபதியால் மாத்திரமே முடியும்.  எனவே அவருடன் இது குறித்து கலந்துரையாடி அவரது நிலைப்பாடு என்னவோ அதனை உங்களுக்கு அறியத்தருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காணி விடுவிப்பு தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏனைய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

 

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற  போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார்.

அந்த வைகயில், ஆனையிறவு சோதனைச்சாவடியில் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறன.< நேற்றைய தினம் யாழில் இருந்து கொழும்புக்கு வருகை தந்த போது வவுனியாவரை மிகவும் இறுக்கமான நடைமுறையை இராணுவத்தினர் முன்னெடுக்கின்றனர்.

ஆனால் வவுனியாவிற்கு அப்பால் எந்த இறுக்கமான நடைமுறையையும் காணவில்லை. ஆனையிறவு சோதனை சாவடியில் என்னைக்கூட மூன்று தடவை திருப்பி அனுப்பியுள்ளார்கள். நாட்டில் எந்த சோதனைச் சாவடியிலும் இல்லாத மிகவும் இறுக்கமான சோதனை நடைபெறுவதற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

 

 

மேலும், அரசால் வழங்கப்படுகின்ற ஐந்தாயிரம் நிவாரணம் போதாது. நாளாந்த கூலிக்கு செல்பவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்களாக இருந்து நாளாந்த உழைப்புக்கு செல்பவர்கள், புகைப்பட பிடிப்பாளர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், உள்ளூர் நன்னீர் மீன்பிடியாளர்கள் என அனைவரின் நாளாந்த வருமானம் பாதிக்கப்படுள்ளது.

இதனை விட பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசால் வழங்கப்படும் நிவாரண உதவி போதாது. இதனை அதிகரிக்க வேண்டும். குறைந்தது மாதம் ஒன்றிற்கு பத்தாயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வழங்கினால் மட்டுமே நிம்மதியாக அவர்கள் வாழ்கையை கொண்டு நடத்த முடியும்.

மேலும், பாடசாலைகளை கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதனையிட்டு மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தோன்றியுள்ளது. எனவே பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களை தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்ற வேண்டாம். அதற்கான பொருத்தமான இடங்களை தெரிவு செய்யுங்கள் என மூன்று விடயங்களை முன்வைத்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top