News

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து பெண்களை தாக்கிய இராணுவத்தினர்

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

நாகர் கோவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிப தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை தாக்குதல் நடாத்திய இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததாகவும் , தாக்குதல் நடாத்தி விட்டு செல்லும் போது, தமது இரண்டு கைத்தொலைபேசிகளையும் , இராணுவ தொப்பி ஒன்றினையும் இராணுவத்தினர் தவற விட்டு சென்றுள்ளதாகவும் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

கடந்த தை பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது.  இதனை தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

 

எனினும் தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை படையினர் தொடர்ச்சியாக தேடிவரும் நிலையில், பொலிஸார் நீதிமன்றில் அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவனை தேடவில்லை  என கூறியிருக்கின்ற நிலையில், நேற்று நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்துள்ளனர்.

எனினும் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தவர்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன், தாக்குதலும் நடாத்தியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் தர்க்கம் நடைபெற்றிருந்தபோது அதில் முன்னின்ற இளைஞன் ஒருவனை இராணுவம் தீவிரமாக தேடிவருகின்றது. எனினும் அவனை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில் பல தடவைகள் அவருடைய குடும்பத்தார் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றால், நீதிமன்றில் அவ்வாறு ஒரு நபரே இல்லை, நாங்கள் தேடவும் இல்லை என கூறிய பொலிஸார், காரணமே இல்லாமல் குறித்த இளைஞனை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்பதாகவும்,  முறைப்பாட்டை பெற பின்னடிப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top