News

  அமெரிக்காவில் கருப்பின வாலிபர் பலி விவகாரம்; இங்கிலாந்தில் நடந்த போராட்டத்தில் 6 போலீசார் காயம்

அமெரிக்காவில் கருப்பினர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இங்கிலாந்து நாட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நிறவெறியுடன் நடந்து கொண்டதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன.

போலீசாரின் அடக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்தேறின. இந்த போராட்டங்களில், பெருமளவிலான மக்கள் பேரணியாக திரண்டனர். இதில், இங்கிலாந்து நாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியின் சில இடங்களில் வன்முறைகளும் பரவின. குறிப்பிடும்படியாக, லண்டன் நகரில் போலீஸ் அதிகாரிகளின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், குடிமக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று இங்கிலாந்து உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், தொடர் போராட்டங்களை நடத்தி அவற்றில் வன்முறையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி லண்டன் பெருநகர போலீசார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘அமைதியை சீர்குலைத்தல், ஒழுங்கு மீறல், போலீசார் மீது தாக்குதல், தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல், போதை பொருட்களை வைத்திருத்தல் மற்றும் குடிபோதையில் ஈடுபட்டு ஒழுங்கை சீர்குலைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 100க்கும் கூடுதலானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்’ என தெரிவித்து உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top