News

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள வெள்ளைவான் கலாசாரம்! லக்ஸ்மன் கிரியெல்ல

இலங்கையில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல் கலாசாரமும், அடக்குமுறை ஆட்சியும் உருவெடுத்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான தரிஸா பெஸ்டியனின் இல்லத்தில் நுழைந்து இரகசிய பொலிஸார் சோதனையிட்ட விடயத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், அண்மையில் ஊடகவியலாளர் தரிஸா பெஸ்டியனின் கொழும்பிலுள் வீட்டிற்குள் நுழைந்த இரகசிய பொலிஸார் அவரது மடிக்கணினி மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

நாட்டில் மீண்டும் அடக்குமுறை கலாசாரம் ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறினார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நவம்பர் மாதத்திலிருந்து வழங்கியவாக்குறுதிகள் ஒன்றை கூட அமுல்படுத்தவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான பிரச்சினையை நாங்கள் பொதுத் தேர்தலின் பின்னர் தீர்த்துக்கொள்கிறோம். ஆனால் இப்போது மக்களின் பிரச்சினை அதிகமாகி வருகிறது. பொருட்கள் சேவைகளின் விலை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

மீண்டும் அடக்குமுறை கலாசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரிஸா பெஸ்டியன் என்ற பெண் ஊடகவியலாளரின் கொழும்பிலுள்ள இல்லத்திற்குள் இரகசிய பொலிஸார் நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

அவருடைய மடிக்கணினியை எடுத்துள்ளனர். இது மிகவும் சட்டவிரோதமான செயல்.  நீதிமன்றத்தின் அனுமதியின்றி இப்படி செய்யமுடியாது. தரிஸா பெஸ்டியன் என்பவர் மிகவும் திறமையான ஊடகவியலாளர். அவரது புகைப்படங்கள், ஆவணங்களை பொலிஸார் வீட்டிற்கே சென்று சோதனையிட்டுள்ளனர்.

இதனை நாங்கள் கண்டிக்கிறோம். கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் மீட்கப்பட்ட நபரது சடலம் மற்றும் ஊடகவியலாளரின் இல்லத்தில் நுழைந்த இரகசிய பொலிஸார் போன்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரமும், அடக்குமுறை கலாசாரமும் ஆரம்பமாகியிருக்கின்றது என்று கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top