News

கால்நடை சந்தைக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல்: 20 பேர் பலி

கிழக்கு புர்கினா பாசோவில் துப்பாக்கிதாரிகள் கால்நடை சந்தையில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் சனிக்கிழமை நண்பகலில் கொம்பியங்கா நகரில் அமைந்துள்ள நெரிசல் மிகுந்த சந்தையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் புர்கினா பாசோவில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் வன்முறைகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான மோதல்களும் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய வன்முறைகளால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று, மாலியின் எல்லைக்கு அருகே, வடக்கில் வர்த்தகர்களின் ஒரு குழுவினரை இஸ்லாமிய போராளிகள் தாக்கியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் பாடசாலைகளை குறிவைப்பதால், சுமார் 300,000 சிறார்கள் கல்வியறிவை பெறாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top