News

ஜார்ஜ் பிரச்சினை அடங்கும் முன் மீண்டும் பொலிசார் அட்டூழியம்: முதியவரை தள்ளிவிட்டதில் மண்டை உடைந்தது!

இப்போதுதான் கருப்பினத்தவர் ஒருவரை பொலிசார் கொன்றதால் அமெரிக்காவே பற்றியெரிகிறது, உலகமே கொந்தளித்துப்போயிருக்கிறது. என்றாலும் சில பொலிசாரின் அட்டூழியங்கள் குறைய வில்லை.

அமெரிக்காவில், Buffalo பகுதியில் ஒரு முதியவரை பிடித்து முரட்டுத்தனமாக கீழே தள்ளி அவரது மண்டையை உடைத்திருக்கிறார்கள் பொலிசார் சிலர்.  வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஒரு முதியவர் பொலிசாரிடம் ஏதோ கூற முயல, ஒரு பொலிசார் அவரை லத்தியால் தள்ள, மற்றொருவர் அவரைப் பிடித்துத் தள்ளி விடுகிறார். அந்த முதியவர் வேகமாக சென்று விழுந்ததில் அவரது மண்டை உடைந்து இரத்தம் கொட்டுகிறது.

அவருக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க ஒரு பொலிசார் குனிய, மற்றவர் அவரை தடுத்து அங்கிருந்து அழைத்து செல்கிறார். இதற்கிடையில், ஒருவர் தவறி கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என பொலிசார் அறிக்கையில் வேறு எழுதிவைத்துள்ளார்கள். ஆனால், உள்ளூர் வானொலி நிலைய செய்தியாளர் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துவிட்டார். அது சமூக ஊடகங்களில் பரவ, Buffalo பகுதி மேயர் Byron Brown அந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

கீழே தள்ளப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜார்ஜ் பிரச்சினையால் அமெரிக்கா கொந்தளித்துப்போயிருக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் அந்த முதியவரை கீழே தள்ளிவிட்ட பொலிசார் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது முறைப்படி விசாரணை துவங்க உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top