News

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டுமா? சி.வி.விக்னேஸ்வரன்

எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியாலும் தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியாது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி –  நீங்கள் கொழும்பில் இருக்கும் போது பல வருடங்களாக சமய சமூக மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி வந்தீர்கள். தற்போது அரசியலில் இறங்கியதால் அரசியல் காரணங்களுக்காக உங்கள் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகின்றார்கள். உங்கள் சமய அறிவுப்படி அரசியல் அனுபவத்தின்படி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டுமா?

பதில் –  நிச்சயமாக! நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும் தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது இனி எந்நாளும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதே போல்த்தான் இதுவும். தமிழர்கள் மாண்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விக்கு சமய ரீதியாகப் பதில் கூறுவதானது என்னை அரசியல் ரீதியாகப் பாதிக்கும். என்றாலும் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்களை பயப்படாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். அந்த அடிப்படையில் பதில் இறுக்கின்றேன். தத்துவஞானம், சமயஞானம் பெற்றவர்கள் உலகைப் பார்க்கும் விதம் வேறு அரசியல்வாதிகள் பார்க்கும் பார்வை வேறு. அதை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிட்டுமா? சில நாட்களுக்கு முன்பதான பத்திரிகையின் படி கௌரவ பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழர்களுக்கான தீர்வைத் தான் மட்டுந்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார். அது அவரால் முடியாது. ஏன் என்றால் அவருக்குத் தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. பின் எப்படி தமிழர்களின் பிரச்சனைக்குத் தானே தீர்வைத் தரப் போவதாக அறிவிப்பது? எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியாலும் தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியாது.அப்படி தருவதானால் அவர்கள் பின்வரும் உண்மைகளை ஏற்க வேண்டியிருக்கும். அவர்களால் அவற்றை, ஏற்க முடியாது. அவர்களின் அகந்தை, அறியாமை போன்றவை அதற்கு இடம் கொடுக்காது.

இந் நாட்டின் பூர்வீகக் குடிகள் சைவத் தமிழரே. சரித்திர ரீதியாக இதில் எந்த வித மயக்கமும் இல்லை.  அவர்கள் தொடர்ந்து இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.  மகாவம்சம் வரலாற்று நூல் அன்று. அது பௌத்தத்தை மாண்புறச் செய்ய எழுதப்பட்ட புனை கதை. அது பாளியில் எழுதப்பட்டது. அது எழுதப்பட்ட போது சிங்களவர்களும் இருக்கவில்லை, சிங்கள மொழியும் இருக்கவில்லை.

சிங்கள மொழி ஒரு மொழியாக பரிணாமம் பெற்றது கி.பி. 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. . பிரிட்டிஷார் 1833ல் நாட்டை நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கென இராஜ்ஜியங்களை அமைத்து வடக்கு கிழக்கில் 3000 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து குடியிருந்து வந்துள்ளார்கள். கிழக்கில் கண்டி அரசர்களுக்கு சில சமயங்களில் திறை செலுத்தினாலும் கிழக்கில் வாழ்ந்து வந்தவர்கள் தமிழரே.

இது வரையில் தமிழர்க்கு எதிராக நடந்து வந்திருப்பது இனப்படுகொலையே. இவற்றை ஏற்காது எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர் பார்க்கும் தீர்வைத் தரமுடியாது. வேண்டுமானால் இவ்வளவுதான் தரலாம் என்று தமது எச்சில் இலையில் உள்ள எலும்புகளை எமக்குத் தூக்கிப் போடலாம். தமிழர்கள் சிலர் அதனை ஏற்கச் சித்தமாக உள்ளார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் தம்முடைய மாண்பையும் மதிப்பையும் நெடிய இருப்பையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வையே ஏற்றுக் கொள்வார்கள்.

ஐரோப்பாவில் 100 வருடப் போர் நடந்தது. அயர்லாந்து மக்கள் பல வருடகாலம் போர் புரிந்து வந்துள்ளார்கள். அதே போன்று தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறும் வரையில் போராடுவார்கள். தமிழர்கள் தமக்கிருக்கும் உண்மையான, நீதியான, நியாயமான உரித்துக்களை முன்வைத்தே தமது தீர்வுகளைக் கேட்கின்றனர். அதனை வழங்காது சிங்களத் தலைவர்கள் ஏமாற்றி வந்தால் 100 வருடத்திற்கும் தொடர்ந்து போராட்டம் நடத்த தமிழ் மக்கள் உள்ளுறுதி கொண்டிருக்கின்றனர்.

கேப்பாப்பிலவு மக்களின் மன உறுதியையும் விடா முயற்சியையும் உலகம் அறியும். இன்று நாளை நாங்கள் போய்விடலாம். ஆனால் எமது வம்சத்தில் உதிப்பவர்கள் 100 வருடத்திற்கு மேலும் போராட்டத்தை நடத்துவார்கள் – தமது நீதியான உரித்துக்கள் கிடைக்கும் வரை! இதனை உணர்ந்து சிங்களத் தலைவர்கள் நியாயமான தீர்வொன்றை வெகுவிரைவில் கொண்டு வந்து அதன் அடிப்படையில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காரணம் அவர்களுக்கு உலக நெருக்குதல்கள் கூடிக் கொண்டு வருகின்றன.

பொருளாதாரம் சிதைந்து வருகின்றது. தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாம் இன்னொரு நாட்டின் அடிமையாக நேரிடும் என்ற பயம் பீடித்துள்ளது. எமது புலம்பெயர் மக்களின் இன வழியான ஈடுபாடு அவர்களை மலைக்க வைத்துள்ளது. இவற்றைவிட தாம் இதுகாறும் தமிழர்களுக்கு இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுத்து வந்துள்ளோம் என்ற எண்ணம் இவர்களிடையே மேலோங்கி வருகின்றது. இனப்படுகொலையை ஏற்காவிட்டாலும் படுகொலைகள் பல தமிழர்க்கெதிராக தம்மால் நடாத்தப்பட்டன என்ற உண்மை அவர்களுள் உறைக்கத் தொடங்கியுள்ளது. இதனைச் சிங்கள சகோதர சகோதரிகளே அவர்களுக்கு இடித்துரைத்து வருகின்றனர். சில வருடங்களுள் ஒரு சிறந்த தீர்வை எதிர்பார்க்கலாம்.” என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top