Canada

பீல் பிராந்திய கல்விச்சபை தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரியது

 

ஜூன் 4ஆம் திகதியன்று எமது பீல் கல்விச்சபையின் ‘டுவீட்டர்’ பக்கத்தில் பகிரப்பட்ட செய்தி தொடர்பாக தமிழ் மக்கள் எம்மிடம் பகிர்ந்துகொண்ட கவலைகள் குறித்து எமது கல்விச்சபையின் தலைவரும் நானும் ஜூன் 16ஆம் திகதியன்று தமிழ் சமுகத்தினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தோம். மேற்படி சந்திப்பின் மூலம் மேலும் தமிழர் பிரதிநிதிகளிடமிருந்து கருத்துகள் பலவற்றைக் கற்றறிந்துகொள்ள எமக்கு வாய்ப்புக் கிட்டியதை நாம் மிகவும் வரவேற்கின்றோம்.

உள்நாட்டுப் போரை 2009இல் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கை அரசு நடத்திய இன அழிப்பின்போது தமிழர்களில் பலர் தங்கள் உறவுகளை இழந்தும், பாதிக்கப்பட்டும் இன்றும் அந்நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியாதுள்ளது.

தமிழர் இன அழிப்பு நாளை மே 18ஆம் திகதியன்று அறிக்கை வாயிலாகவும், ‘டுவிட்’ மூலமாகவும் அங்கீகரித்ததில் பீல் கல்விச்சபை பெருமிதம் அடைகிறது. இழந்த அப்பாவி உயிர்களுக்கும், இடம்பெயர்ந்தவர்களுக்கும், துன்பங்களை அனுபவித்தவர்களுக்கும், பாதிப்புற்றவர்களுக்கும் மதிப்பளித்து நாம் வெளியிட்ட எமது அறிக்கையில் இன்றுவரை நாம் உறுதியாக உள்ளோம். இந்த நாள் பீல் கல்விச்சபையால் தொடர்ந்தும் பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டிய முக்கிய நாள் ஆகும். இந்நினைவு நாளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் இதில் பங்குகொண்டுமேலும் கற்றறிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் பீல் கல்விச்சபையின் ஊழியர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜூன் 4, 2020 அன்று வெளியிடப்பட்ட எங்கள் ‘தெளிவுபடுத்தல்’ ‘டுவீட்’, தமிழ் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், எமது கல்விச்சபையின் தமிழ் ஊழியர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியதையிட்டு நான் மிகுந்த வருத்தம் கொள்கிறேன். அதற்காக, எனது சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பீல் கல்விச்சபை சார்பாகவும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நாம் ஜூன் 4ஆம் திகதி அன்று வெளியிட்ட ‘டுவீட்’ஐ அகற்றுகின்றோம்.

மேற்படி ‘டுவீட்’ ஆனது, தமிழ் இன அழிப்பை அங்கீகரித்ததிலிருந்து நாம் பின்வாங்கும் நோக்கம் கொண்டதாக இருக்கவில்லை என்பதை மக்கள் அறிந்துகொள்வது முக்கயமானது. மாறாக அது எமது பள்ளிகளில் மேற்படி உள்நாட்டுப் போர் தொடர்பான வெறுப்புணர்வுகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு நேர்மையான முயற்சியாகவே அது அமைந்திருந்தது. சிங்களப் பெற்றோரிடமிருந்து அவர்களின் மாணவர்களின் பாதுகாப்புக் குறித்த அச்சம் தொடர்பாக சிறிலங்கா துணைத் தூதரிடமிருந்து எமக்கு அனுப்பப்பட்ட அதிகாரபூர்பமான கடிதத்தினாலேயே மேற்படி ஜூன் 4ஆம் திகதிய டுவீட் வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை நான் உறுதிப்படுதிதுகிறேன்.

மேற்படி டுவீட்டில், தமிழ் இன அழிப்பு எனும் பதத்தினை அதில் தெரிவிக்காதது தவறு. அதனைவிட இன அழிப்பு பற்றிய கருத்தின்போது அதில் சமநிலை பேணப்பட வேண்டும் எனத் தெரிவித்தது மிகப்பெரிய தவறு. அது வேண்டுமென்ற உள்நோக்கம் கொண்டதன்று.

எமது சந்திப்பில் நீங்கள் பரிந்துரைத்தபடி, இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு வெளிப்படையான பொறிமுறையை பீல் கல்விச்சபை நிறுவுவதற்கான தேவையை எடுத்துக்காட்டுகின்றன.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்த கல்விச்சபையாக கறுப்பு நிறவெறிக்கு எதிராக குரல்கொடுப்பதையும், பிற இன பாகுபாடுகளை அகற்றுவதையும் முக்கியமான பணியாகக் கொண்டு முன்னேற உதவவேண்டும். தமிழ் சமுக உறுப்பினர்களால் ஆன ஓர் ஆலோசனைக் குழு ஆரம்பிப்பது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும். அதன் முதல் கலந்துரையாடல்களில் ஒன்றாக தமிழ் சமூகத்தின் வரலாறு மற்றும் அனுபவங்கள் தொடர்பான கல்விச்சபை தழுவிய பயிற்சிகள் பற்றிய உங்கள் ஆலோசனைகள், தேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு கல்வியாளராக, எதிர்காலத்தை நிர்ணயிக்க சிறந்த வழி கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்பவையே சிறந்த பாடங்களாக அமையும் என்பதை நான் நன்கு அறிவேன். அதனாற்றான், தமிழ் இன அழிப்பு கற்றல் வாரத்தை அறிவிக்கும் சட்டமூலமாகிய வரைவு-104 ஆதரிப்பவர்களின் பட்டியலில் எனது பெயரையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்காபரோ றூஜ் பார்க் மானில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்வி அமைச்சர் ஸ்டிபன் லெச்சே அவர்களால் ஆதரவளிக்கப்பட்டு, ஏகமனதாக இரண்டாவது வாசிப்பை நிறைவுசெய்துள்ள தமிழின அழிப்பு அறிவியற் கிழமை தொடர்பான சட்டம் பற்றி அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் இன அழிப்பின்போது நடைபெற்ற கொடூர செய்ல்கள் தொடர்பாக அறிந்துகொள்வதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், இவைகள் மீண்டும் நடைபெறாதிருக்க உறுதிப்படுத்தும் வகையில் மேற்படி சட்டமூலம் சட்டமாக அங்கீகாரம் பெறுவதை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

உண்மையுள்ள,

பீட்டர் ஜோசுவா

கல்வி அதிகாரி

பீல் பிராந்திய கல்விச்சபை

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top