News

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சவேந்திர சில்வாவின் சாட்சியத்தை அம்பலப்படுத்திய சிறீதரன்

 

எங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை, எங்களிடம் சரணடைந்தவர்களை நாங்கள் இராணுவ ரீதியாக கொலை செய்திருக்கின்றோம் என்ற சாட்சியத்தை இராணுவ தளபதி சவேந்திர சில்வா சர்வதேச சமூகத்திற்கு தந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் கூறுகையில், சம்பந்தன் ஐயா இருக்கின்ற மேடையிலேயே நான் வெளிப்படையாக பேசியிருக்கிறேன் என்னுடைய தலைவர் பிரபாகரன் தான்.

நான் தேசிய விடுதலை இயக்கமான, தமிழர்களுடைய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்கின்ற ஒருவன். நான் ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொள்கிறவன். ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து அது மௌனித்த காலம் வரை அதே மண்ணிலே வாழ்ந்த ஒருவன் நான்.

நாங்கள் நிராகரிப்பதாக குறிப்பிடவில்லையே. நான் சுமந்திரன் முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்.  அவருடைய கருத்து வேறு. என்னுடைய கருத்து நான் ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒருவன். தேசியத் தலைவர் பிரபாகரனை இப்போதும் என்னுடைய உள்ளக ஆத்மாவாக என்னை வழிநடத்துகின்றதாக நினைக்கின்ற ஒருவன்.

ஆகவே நாங்கள் ஆயுதப் போராட்டத்திலிருந்து யாரையும் புறந்தள்ளியோ, புறக்கணித்தோ பேசவில்லை. எங்களை பொறுத்தவரையில் ஆயுதப் போராட்டம் நியாயமானது என சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்கள் என கூறப்படுபவர்கள் இறந்து விட்டனர். புலிகளே தங்களுக்குள் முரண்பட்டு அவர்களை கொலை செய்து விட்டனர் என்ற வகையான ஒரு கருத்து இராணுவ தளபதி சவேந்திர சில்வாவால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன? என வினவியதற்கு பதிலளிக்கையில்

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை நியமனம் செய்கின்ற போதே அவர் தமிழர்களுடைய இரத்தம் குடித்த இப்போதும் இரத்த வாடையுடன் இருக்கின்ற மனிதர் என நான் வெளிப்படையாகவே நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். சவேந்திர சில்வா தான் இந்த யுத்தத்தின் பிரதானமான சூத்திரதாரிகளில் ஒருவர். அவரால் தான் நிறைய எங்களுடைய தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், அழிக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாற்று ரீதியாக அனைவருக்குமே தெரியும்.

அவ்வாறான ஒருவர் தமிழர்கள் இல்லை. எல்லாரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சொல்கின்ற செய்தி ஒரு பொது விடயம் அல்ல. ஏற்கனவே யுத்தம் முடிந்து ஓமந்தை பகுதியில் வைத்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்தும் எங்களுடைய உறவுகள் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார்கள். குறிப்பாக பல்வேறுபட்ட பிரான்ஸிஸ் பாதர்களோடு மூத்த போராளி பாலகுமாரன் உட்பட அவருடைய மகன் சூரியத்தேவன், விளையாட்டுத் துறைக்கு பொறுப்பாக இருந்த ராஜா, அவருடைய மூன்று குழந்தைகள், மஜித் குடும்பமாக இவ்வாறு பல போராளிகள் தாங்களாகவே குடும்பம் குடும்பமாக சரணடைந்திருந்தார்கள்.

அருட்தந்தையரோடு சென்ற 58 பேரை காணவில்லை, அவர்களுடைய வரலாறு இல்லை என சொல்லப்படுகிறது. பல ஒப்படைப்புக்கள் பகிரங்கமாக நடந்திருந்தன. எனினும் அதை தற்போது இல்லை என்று சொன்னால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே? நீங்கள் அவர்களை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் தானே செய்திருக்கிறீர்கள்? இராணுவத்திடம் தானே ஒப்படைக்கப்பட்டது. புலிகளிடம் ஒப்படைக்கப்படவில்லையே. இதே சவேந்திர சில்வாவும், கோட்டாபய ராஜபக்சவும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தான் இவர்களை கொலை செய்திருக்கிறது என்பது மிக வெளிப்படையாக சொல்லப்படுகின்ற ஒன்று.

ஆகவே இது அவர் தந்த ஒரு சாட்சியம் சர்வதேச சமூகத்திற்கு. எங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை, எங்களிடம் சரணடைந்தவர்களை நாங்கள் இராணுவ ரீதியாக கொலை செய்திருக்கின்றோம் என்ற சாட்சியத்தை அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top