News

ஆப்கானிஸ்தான் சிறையில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி; 18 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறைச்சாலையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார்,18 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  அந்நாட்டில், அரசுக்கும் தலீபான் பயங்கரவாத இயக்கத்துக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.  இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அரசுக்கும் தலீபான் பயங்கரவாத இயக்கத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி கைதிகளை குழுக்களாக பிரித்து விடுதலை செய்து வந்தனர்.  இதில் தாங்கள் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரம் பிணை கைதிகளை விடுவித்து விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி சிறைகளில் இருக்கும் மீதமுள்ள தலீபான் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அதிபர் அஷ்ரப் கனி அரசுடன் ஒரு வாரத்துக்குள் பேச தயாராக இருப்பதாகவும் தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பக்ரீத் பண்டிகையையொட்டி மக்களிடம் உரையாற்றிய அதிபர் அஷ்ரப் கனி கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 400 தலீபான் கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என்றும், அவர்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாள் சண்டை நிறுத்தத்தை தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ள நிலையில் அதிபர் அஷ்ரப் கனியின் இந்த பேச்சு அவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலாலாபாத் நகரில் சிறைச்சாலை ஒன்றின் நுழைவு வாயில் பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளான்.  இதில், ஒருவர் பலியானார்.  18 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த சம்பவம் நடந்தபொழுது, பயங்கரவாதிகள் மேல் தளத்தில் இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தமும் கேட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top