News

பிரேசிலில் 1 லட்சத்தை கடந்தது, கொரோனா பலி: சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு அஞ்சலி

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலிகள் 1 லட்சத்தை தாண்டி விட்டன. சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகளவில், உயிர்க்கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள நாடு, பிரேசில். அங்கு கொரோனா வைரஸ் தொற்று வெறியாட்டம் போடுகிறது. 21 கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகிற சோகம், அங்கு தொடர்கிறது. அங்கு நேற்று முன்தினம் 905 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக உள்ளது.
இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 ஆகும்.
பலி 1 லட்சத்தை கடந்த நிலையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரியோ டி பாஸ் என்ற புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆயிரம் சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டது.
இதே போன்று நாடாளுமன்ற சபாநாயகர் டேவி ஆல்கொலம்பரே, 4 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளார். இது அந்த நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 மாதங்களில் கொரோனா தனது வெறியாட்டத்துக்கு 50 ஆயிரம் பேரை பலி கொண்டது. ஆனால் அடுத்த 50 நாளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகி 1 லட்சத்தை கடந்திருக்கிறது.
பிரேசிலில் இன்னும் தொற்று பரவல் உச்சம் தொடவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் கடைகளும், உணவகங்களும் அங்கு ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன. பிரேசில் கொரோனா பிடியில் சிக்கித்தவிப்பதற்கு ஆரம்பத்தில் அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ காட்டிய அலட்சியப்போக்குதான் காரணம் என சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை அவர் குறைத்து மதிப்பிட்டதோடு மட்டுமின்றி, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எதிர்த்தார்.
அவரே கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி மீண்டுள்ள நிலையிலும், தொற்றை கட்டுப்படுத்த மாகாண கவர்னர்கள் மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எதிர்த்தார். பொதுவெளியில் அவர் முக கவசம் கூட அணியாமல் தோன்றி, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கண்டனத்துக்கு ஆளானதும் நேர்ந்தது. ஜெயிர் போல்சொனரோ அரசு, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை சரிவர எடுக்காத நிலையில், உள்ளூர் அதிகாரிகள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதில் கவனம் செலுத்துவதால் அது வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரேசில் அரசு, கொரோனா வைரஸ் பரவலை பொது சுகாதாரத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு ராணுவ ஜெனரலை கொண்டு நிர்வகிக்கிறது. அவருக்கு முந்தைய 2 சுகாதார மந்திரிகள், மருத்துவர்கள் ஆவர். அதிபர் ஜெயிர் போல்சொனரோ கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதிலும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதிலும் வெளியிட்ட கருத்துகளில் ஏற்பட்ட அதிருப்தியால் அவர்கள் இருவரும் பதவியை தொடர முடியாமல் போனது.
கொரோனா வைரஸ் தொற்றை சிறிய காய்ச்சல் என்று ஜெயிர் போல்சொனரோ கூறியதால், உள்நாட்டில் கடும் விமர்சனங்களுக்கும் ஆளானார். ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால்தான் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டேன் எனவும் அவர் கூறியது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
பிரேசிலில் தற்போது 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்து 477 பேர் பலியானதாகவும், சுகாதார அமைச்சகம் கூறினாலும், போதிய அளவுக்கு பரிசோதனைகள் நடத்தாததால் இந்த எண்ணிக்கைகள் இன்னும் மிக அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இது பற்றி தொற்று நோய்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் டாக்டர் ஜோஸ் டேவி அர்பேஸ், செய்தி நிறுவனம் ஒன்றிடம்பேசும்போது, “நாங்கள் விரக்தியுடன்தான் வாழ வேண்டும். ஏனென்றால், இது உலகப்போர் போன்றதொரு சோகம். ஆனால் பிரேசில் கூட்டு மயக்க நிலையில் உள்ளது” என கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top