News

 அமெரிக்காவில் பதற வைக்கும் பொலிஸ் வன்முறை… பட்டப்பகலில் 20 முறை சுடப்பட்ட கருப்பின இளைஞர் !

அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல முக்கிய நகரங்களில் கருப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான பொலிஸ் வன்முறைகள் தொடர் கதையாகவே உள்ளது.

29 வயதான டிஜோன் கிஸ்ஸி, திங்கள்கிழமை பிற்பகல் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, இரண்டு காவல்துறை அதிகாரிகள் சைக்கிள் ஓட்டுதல் விதிமுறைகளை மீறியதற்காக அவரைத் தடுக்க முயன்றுள்ளனர்.

 

 

காவல்துறையினரின் கூற்றுப்படி, கிஸ்ஸி முதலில் சைக்கிளுடன் நிறுத்தாமல் சென்றதாகவும், பின்னர் அவரைத் துரத்திய அதிகாரிகளில் ஒருவரை முகத்தில் குத்து விட்டதாகவும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொலிசாரை தாக்க முயன்றபோது, பாதுகாப்பு கருதி பொலிசார் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கிஸ்ஸியின் வழக்கை முன்னெடுக்கும் சட்டத்தரணி இதை முற்றாக மறுத்துள்ளதுடன், அவரிடம் ஆயுதம் இருந்தது என கூறுவதே இட்டுக்கட்டிய பொய் எனவும், பொலிசாரிடம் சிக்காமல் சென்றதால், ஆத்திரத்தில் 20 முறை கிஸ்ஸியின் முதுகில் சுட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் வேண்டும் என்றே தாமதப்படுத்தியதாகவும் பொலிசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே, கிஸ்ஸி எந்த சைக்கிள் ஓட்டுதல் விதிமுறையை மீறியிருக்கிறார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் குறித்தும் அவர் எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆனால், அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, இரண்டு பொலிஸ்காரர்களும் வெள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.

 

 

டிஜோன் கிஸ்ஸி கொல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம், மினியாபோலிஸில் பொலிஸ் நடவடிக்கையின்போது ஆபிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஏராளமான அமெரிக்க நகரங்களில் இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன, அத்துடன் கலவரங்களும் நடந்தன.

மிக சமீபத்தில் விஸ்கான்சின் மாகாணத்தின் கெனோஷா நகரம் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜேக்கப் பிளேக் பொலிசாரால் முதுகில் சுடப்பட்டு பலத்த காயமடைந்தார். பொதுமக்களிடையே இச்சம்பவம் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாகாண ஆளுநர் மற்றும் நகர தலைவர் உள்ளிட்டவர்களின் கருத்தை மதிக்காமல் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கெனோஷா பகுதிக்கு சென்றுள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top