News

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் கண்டெடுப்பு!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் பேராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நேற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்  முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணி  5 மணியளவில் நிறைவடைந்தது.

 

இதன்போது, தகடு 01, மண்டையோடு -02, பல்வரிகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பெற்றி, மகசின் 02 என்பன கண்டெடுக்கப்பட்டன.

அதன் பின்னர் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் அறிவித்தார்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம், மனித எச்சங்கள் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இலக்கத் தகடு என்பன அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 

 

முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு முன்னாள் பெண் போராளி ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதன்போது சோதியா படையணியை சேர்ந்த இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மண்டையோட்டுடன் கூடிய ஒரு தொகுதி எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 என்ற அடையாளங்கள் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் B+ மற்றும் O+ இரத்த வகையைச் சேர்ந்தவர்களது உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 

இவ் அகழ்வுப் பணிகளின் போது எதிரியிடம் அகப்பட்டால் தமது உயிரை மாய்ப்பதற்காக விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்படும் சைனட் குப்பி ஒன்றும், பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டியும், உரப்பைகள், விடுதலைப்புலிகளின் வரிச் சீருடைகள், பச்சை நிற சீருடைகள், பாதணி ஒன்று, பற்றிகள், சம்போ போத்தல்கள் போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை துப்பாக்கி ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், 8 மகசின், 3 கோல்சர் கவர் போன்றவையும் இந்த சந்தர்ப்பத்தில் மீட்கப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top