News

குட்டி மணி விவகாரத்தை நாடாளுமன்றில் கையிலெடுத்த சஜித்! அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசமைப்பை மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,  ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன் 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்

அவரது பெயரை, தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமாணி அறிவித்தலில் வெளியிட்டிருந்ததோடு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பி வைத்திருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், குட்டி மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்து. அவர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு நாடாளுமன்றில் இடமளிக்க முடியாதெனக் கூறி, அப்போதிருந்த சபாநாயகர் பாகிர் மாகார், சிறந்த முன்னுதாரணம் ஒன்றை வழங்கியிருந்தார். ஆனால், அந்த முன்னுதாரணத்தை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள அனுமதியளித்திருந்தீர்கள்.

அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைகளை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்திருந்தீர்கள். ஏன் இப்படித் தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறீர்கள்? இதனூடாக நீங்கள் அரசமைப்பை மீறியிருக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில், நீங்கள் நீதிமன்றிலேயே விவாதிக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பின் அடிப்படையிலேயே நான் செயற்பட்டிருக்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top