News

தமிழரின் நினைவுகூர்வதற்கான உரிமை மீதான இலங்கையின் சமீபத்திய தாக்குதலை கண்டிக்கும் பேர்ள் அமைப்பு

தமிழர் உரிமைகளுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனை நினைவுகூருவதற்கு இலங்கை நீதிமன்றம் தடைவிதித்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாக பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முந்தினம் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், 1987ஆம் ஆண்டு தமிழர் உரிமைகளுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த லெப். கேணல் திலீபனை நினைவுகூருவதற்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடைவிதித்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

நினைவேந்தல் செயற்பாடுகளை ஏற்பாடு செய்தவர்கள் தடையின் காரணமாக கைது செய்யப்பட்டமையை பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இத்தடைக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புச் செயற்பாடுகளுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விளைகிறது.

இது தமிழர் போராட்டத்தின் முக்கிய தினங்கள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவதைத் தடுப்பதற்கு அரசு தொடர்ச்சியாக எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு அச்சமூட்டும் விரிவாக்கமாகும். யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் போராட்டத்தை நினைவுகூருவதற்கு முயற்சிக்கும் தமிழர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், துன்புறுத்தியும் வந்திருந்த போதிலும், அதற்காக சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது எச்சரிக்கையளிப்பதாகவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிப்பதோடு, அரசின் இச்செயற்பாடுகளைக் கண்டிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் காட்டிய ஒற்றுமைக்குத் தனது ஆதரவையும் தெரிவிக்கிறது.

கடந்த காலத்தில், தமிழர் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களையும், அதிற் கலந்துகொண்டவர்களையும் பாதுகாப்புப் படையினர் கண்காணித்தும், துன்புறுத்தியும் வந்துள்ளதைப் பேர்ள் தனது 2016 ஆம் ஆண்டின் ‘கடந்த காலத்தை துடைத்தழித்தல், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் நினைவுகூரல் மீதான அடக்குமுறை’ எனும் அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளது. எனினும், ஒரு மீ தேசியவாத, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசும், தமிழர் அரசியல் மீது அக்கறை கொள்ளாத ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் சேர்ந்த தற்போதைய காலநிலை இன்னும் ஆபத்தானது.

</p><p>இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களால் ஆண்டுதோறும், நவம்பர் 27ஆம் திகதி நினைவுகூரப்படும் மாவீரர் நாள் மற்றும் மே 18ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்.

இது பல்லாண்டுகளாகத் தமிழர்கள் போராடிப் பெற்ற அரசியல் வெளியை மேலும் சுருங்கச்செய்வதோடு, இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சிலர் கொண்டிருக்கும் சிறிய நம்பிக்கையையும் சிதைப்பதாக அமையும்.  தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுடன் பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளதுடன், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

நினைவுகூரல் மீதான அரச அடக்குமுறையை முடிவுக்குக்கொண்டுவருவது வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த அனைவருக்கும் உதவிசெய்வதாக அமையும் என்பதுடன், அவர்களது காயங்களை ஆற்றும் செயன்முறையை எளிதாக்கும். “இன முரண்பாட்டின் நிலையான தீர்விற்கு, அதன் பங்கேற்பாளர்களும், அதனால் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களும் சுதந்திரமாக நினைவுகூருவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்,” என எமது நிர்வாக இயக்குனர் தாஷா மனோரஞ்சன் கூறினார்.

“நினைவுகூரல் மீதான அரச கட்டுப்பாடுகளும், ஒருபக்கச்சார்பான விவரணங்கள் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதும் நாட்டை மேலும் பிளவுபடுத்துவதாகவே அமையும்,” என அவர் மேலும் தெரிவித்தார். தமிழர் நினைவுகூரல் மீதான தடை ஒரு படுகுழியாகும். அது வேகமாக இலங்கையை மேலும் முரண்பாட்டிற்குள் தள்ளும்.

தமிழ்ச் சமூகத்தின் நினைவுகூருவதற்கான உரிமையிற் தலையிடுவது, சுதந்திரமான பேச்சையும், கருத்து வெளிப்பாட்டையும் பாதுகாக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் என்ற சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அடக்குமுறைக்கும், வெளிப்படுத்தப்படும் பாரபட்சத்திற்கும், பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் பாரிய அட்டூழியங்களுக்கும் பின்விளைவுகள் இருந்தேயாகவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top