News

தியாகி திலீபனுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் பதிவான குரல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45வது கூட்டத்தொடர் கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் கடந்த 14ம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது.

ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெறவிருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இரண்டாவது வாரத்தில் 24/09/2020 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல், அபிவிருத்திக்கான உரிமை, தொடர்பான பொது விவாதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் பிரதான அவையில் ஐந்து உரைகளைப் பதிவுசெய்திருந்தனர்.

பாலம் ( Association Le Pont) அமைப்பின் சார்பாக உரையாற்றிய நிசா பீரிஸ் தனது உரையில், வடக்கு -கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற இன அழிப்பினை ஆய்வுசெய்ய உண்மை அறியும் குழுவில் தகுதியுள்ள ஆய்வாளர்களை சேர்த்து அனுப்பவேண்டும்.

1948ம் ஆண்டிலிருந்து அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களின் எல்லைகளை மாற்றியமைப்பதால் இந்த மாவட்டங்களில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்த தமிழர்களை சிறுபான்மையினராக இலங்கை அரசு மாற்றிக்கொண்டு வருகின்றது.

இன்று இந்த திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படுத்தி தங்களது தாயகத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழர்களை சிறுபானமையினராக மாற்றி வருகிறது.

சிங்கள இராணுவ உதவியுடன், பௌத்த துறவிகள் தமிழர்களின் தாயக பகுதிகளில் பௌத்த விகாரைகளை உருவாக்கி, மக்கள் தொகை மாற்றத்தை செயற்படுத்தி வருகின்றனர்.

நாட்டிலுள்ள 21 படைப்பிரிவுகளில் 14 சிங்கள படைப்பிரிவுகள் தமிழர் பகுதிகளில் உள்ளன. இந்த படைப்பிரிவுகள் தமிழர்களின் பிறப்பிடமான வடக்கு, கிழக்குபகுதிகளில் 68,546 ஹெக்டேயர் நிலங்களை அபகரித்து, தமிழர்களை காலனிபடுத்துகின்றன.

இலங்கையில் அரசியல் கைதிகளாக இருக்கும் தமிழர்களை திட்டமிட்டு கொடுமைப்படுத்தி, சிறையில் வைத்திருக்கின்றனர். இவர்கள் பல கொடுமைகளை அனுபவித்து, தடுப்பு காவலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

11 ஆண்டுகளாக தங்களது உறவுகளின் நீதிக்காக போராடுகின்றவர்களுக்கு உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்டது. 2020ம் ஆண்டு செப்டம்பர் 10 நாள் முதல் 50 மனித உரிமை போராளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் இராணுவம் மிரட்டி தடைவித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளினை நினைவுகூர தடைவிதித்தது. எனவே தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த மனித உரிமை பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தனது உரையை பதிவுசெய்தார்.

பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பின் ( Association culturelle des Tamouls en France) சார்பாக உரையாற்றி பிரபாகரன் அர்த்னா தனது உரையில்,

உண்மை நீதியின் சிறப்பு அறிக்கையாளர் வழங்கிய அறிக்கையில் தமிழர்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டதை வரவேற்கிறேன். 11 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அமைப்பு வடிவ இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வை அழிக்கிறது. ஐ.நா.வின் ஆய்வில் கண்டுபிடித்தது போல பன்னாட்டு சட்டப்படி தமிழின அழிப்பு குற்றங்களுக்கு பொறுப்பான இராணுவ குற்றவாளிகளை பதவி உயர்வுக்கு நியமித்ததை இந்த அவைக்கு நினைவுபடுத்துகிறேன்.

தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கவும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் செயல்படவும் தொண்டு நிறுவனங்களை ஒழங்குபடுத்தவும் பாதுகாப்பு அமைச்சகத்தை நியமிப்பது மிகவும் கவலையைத் தருகிறது. சிங்கள பௌத்த தேசியத்தை அரசு பாதுகாத்து வளர்ப்பதால் ஈழத்தமிழர்கள் மேலும் ஓரங்கட்டப்படுகின்றனர்.இலங்கை ஜனாதிபதியின் தொல்லியல் செயலணியில் 6 பௌத்த துறவிகளை மேலும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் ஒரு தமிழரைக்கூட சேர்க்கவில்லை.

இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஆகஸ்ட் 30ம் திகதி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூற இலங்கை இராணுவமும், காவல்துறையும் நெருக்குதலுக்குள்ளாக்கி நீதிமன்றத்தின் ஊடாக தடைசெய்தன.இந்த செயலானது இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கெதிரான நீதிக்காக போராடுவதை தடைசெய்ததையும் மனித உரிமை மீறல்களாகும் என்று பதிவுசெய்துள்ளார்.

வளர்ச்சிக்கும், குழு ஆற்றல்படுத்துவதற்கான சமுகம் ( Society for Development and Community Empowerment) அமைப்பு சார்பாக உரையாற்றி கெவின் கணபதிபிள்ளை தனது உரையில்,

ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த இலங்கை அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என்று இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களாட்சி நடைமுறைகள் இடம்பெறவில்லை. இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிடும் கிழக்கு வடக்கு மாகாண வேட்பாளர்களை, குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர்களையும், சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களையும் இராணுவமும் காவல்துறையும் கொடுமைப்படுத்தின

தேர்தல் பரப்புரையின்போது கண்காணிப்பு குழுவையும், இருசக்கர வாகன குழுவையும் இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கட்டாயப்படுத்தல், வேட்பாளர்களை மிரட்டுதல் போன்ற செயல்களை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு தொடர்ந்து செய்ததென குற்றம் வழக்கு பதிவுசெய்தது. குருநகருக்கு பரப்புரைக்காக சென்ற சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாணத்தின் முதல்வர், நீதிபதியை இருசக்கர வாகன குழு துன்புறுத்தியது.

இலங்கை அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகள் எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல்(பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டுமென்று தனது உரையை பதிவுசெய்துள்ளார்.

மனித இயக்கத்தின் செயல்( Action of Human Movement- AHM) அமைப்பின் சார்பாக இரண்டாவது தடவையாக உரையாற்றிய நிசா பீரிஸ் தனது உரையில்,

ஈழத்தமிர்களின் சுயநிர்ணய உரிமைபற்றி, சமூகநீதியுள்ள மக்களாட்சியுள்ள பன்னாட்டு ஆணையைப் பரப்புகின்ற சுதந்திர திறனுள்ள திருமிகு இலிவிங்சுடன் சேவநாயணா அவர்களுக்கு இந்த அறிக்கை வாயிலாக அறிய தருகின்றேன். 2009ம் ஆண்டு மே திங்கள் 19ஆம் நாள் இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடந்தபோது 1, 46, 679 மக்கள் ஓராண்டு போரில் வன்னியில் மட்டும் காணவில்லை.மனித உரிமை பேரவை தங்களுக்கு நீதியை உறுதிசெய்யும் என்று 110 மாதங்களாக பாதிக்கபட்டோர், தாய்மார்கள், விதவைகள், அனாதைகள், காத்துகொண்டிருக்கின்றனர்.

சுய நிர்ணயஉரிமை ஈழத்தமிர்களுக்கு இலங்கையில் மறுக்கப்பட்டது. உள்நாட்டு, பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டது. உலக நீதிமன்றம் இந்த உரிமையை ஏற்றுக்கொள்கிறது. மனித உரிமை வல்லுநர்கள், உலக சட்டதரணிகள், இனப்பாகுபாட்டை அகற்றும் அமைப்புகள், ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் சுய நிர்ணய உரிமையின் உள்ளடக்கத்தையும், நோக்கத்தையும் தெளிவாக விளக்குகின்றன.

பன்னாட்டு சமுகங்களால் ஒரு சிறப்பான அமைப்பை உருவாக்கவில்லையென்றால் மனித உரிமை, குடியுரிமை, அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கான உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியாது. அதனால் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.  இலங்கைவின் இனவழிப்பு அரசியலிருந்து தமிழர்களின் தாயகத்தை காக்கவேண்டும். இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும். சுய நிர்ணய உரிமைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து தனது உரையை பதிவுசெய்தார்.

தமிழ் உலகம் என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தைசாமி தனது உரையில், 1948ம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் அன்று ஐ.நாவின் பொது அமர்வில் உருவாக்கப்பட்ட ‘இன அழிப்பினை தடுத்தலும் தண்டனையும்“ என்ற அறிக்கை சமயம், இனம், இனக்குழு, நாடு ஆகியவற்றின் பெயரில் முழுமையாகவோ, ஒரு பகுதியாகவோ அழிக்கவேண்டுமென்ற நோக்கில் செய்தால் அது இன அழிப்பாக விளக்குகிறது.

1.இலங்கை இராணுவமும், வெள்ளைவானில் வரும் காடையர்கள் போன்ற அரசால் உருவாக்கப்பட்ட வகுப்புவாத குழுக்கள் மனித உரிமை பாதுகாவலர்களையும், பத்திரிக்கையாளர்களையும், தமிழ் இளைஞர்களையும் கடத்திக் கொலை செய்கின்றனர்.

2. வகுப்புவாத இராணுவமும் பாசிச அரசும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் அன்றும் அதற்கு பிறகும் உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூர வந்த பெண்கள் அமைப்பினரையும் அவற்றின் தலைவிகளையும் நீதிமன்றத்தாலும் இலங்கை காவல்துறையின் புலனாய்வுதுறையினராலும், இராணுவ புலனாய்வுத்துறையினராலும் மிரட்டி, அடித்து, திட்டி, சோதனை செய்து தடைசெய்தனர்.

இலங்கை இராணுவத்தாலும் அரசு உருவாக்கிய அமைப்புகளாலும் நடைபெறும் தொடர் பாலியல் வல்லுறவு, சிறைப்படுத்துதல் மக்களில் மனநோய்களை உருவாக்குகின்றன. இலங்கை இராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 24 மணிநேர மதுபான கடைகள், மஞ்சள் பத்திரிக்கைகள், போதைப்பொருட்கள், வலிந்த விபச்சாரத் தொழில் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றது.

3. இலங்கை இராணுவமும் அரசும் உருவாக்கிய அமைப்புகளும் தமிழர்களுடைய நிலம், மீன்பிடித்தல், கடைகள், வீடுகள் ஆகியவற்றை அழித்து, திருடி, கொள்ளையடித்து பெரும் அழிவை ஏற்படுத்தின. உலக சட்டவல்லுநர் குழுவின் அறிக்கையின்படி தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களது உடல் ரீதியான வன்முறை நடத்தப்படுவது தமிழின அழிப்பாகும்.

எனவே வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தப் பேரவை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து தனது உரையை பதிவுசெய்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top