News

20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்கி பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவு ராஜபக்சவினரின் திட்டம் – கஜேந்திரகுமார்

20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் திட்டத்தில் ராஜபக்ச அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை இணைத்துக்கொண்டு இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழர்களை புறக்கணித்தே உருவாக்கப்பட்டதுதான் வரலாறு.

இந்நிலையில், அடுத்து கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தினை மேற்கொண்டு தனி ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கும் முனைப்பில் அரசாங்கம் செயற்படுகின்றது. இது நாட்டில் ஒரு பாசிசவாத ஆட்சியை நிலை நிறுவத்துவதையே உள்நோக்கமாக கொண்டது.

எனவே, இந்த செயற்பாடானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மேலும் நசுக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். மேலும், இந்தச் செயற்பாட்டிற்கு தமது கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மேற்கொள்ளளும்.

இதேவேளை, பொதுவாக 20ஆவது திருத்தமானது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஒன்றாகவே உள்ளதுடன் நாட்டில் காணப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை எதிர்வரும் காலத்தில் கேள்விக்குறியாகும் வகையில் அதற்கான பதவி நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படுகின்றது.

அத்துடன், நாடாளுமன்ற ஜனநாயகமும் கேள்விக்குறியாகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top