News

இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க ஐ.நா தலையீடு செய்ய வேண்டும்

இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க ஐ.நா தலையீடு செய்ய வேண்டுமென வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அந்த அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கையளித்துள்ள மகஜரிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும், இலங்கை அரசாங்கத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகள் இருக்குமிடம் அறிந்திட உங்கள் உதவி நாடி எழுதுகிறோம். உங்கள் வழிகாட்டலில் எங்கள் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உலகிலேயே இலங்கை அரசாங்கமே எட்டுமாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் திகழ்கிறது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தமிழினக் குழந்தைகளே.எமது இந்தக் குழந்தைகளில் பலரும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே மாதம் போரின் முடிவில் எவ்விதக்கேடும் நேரிடாது என்ற உறுதிமொழிகளை நம்பி இலங்கை படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர்.

11 ஆண்டு காலம் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகளைப் பற்றியோ, அவர் தம் பெற்றோர் பற்றியோ அரசினரிடமிருந்து பதிலேதும் இல்லை.  சில குழந்தைகள் இலங்கைப் படைகளால் பெற்றோர் சரணடைந்த போது உடன் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தக் குழந்தைகள் இவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர்.

பல்லாண்டு காலமாய் இந்தக் குழந்தைகளின் உறவுகள் இந்தக் குழந்தைகளைத் தேடித் தவிக்கின்றார்கள். இலங்கையில் மட்டுமின்றி, ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலும் கூட இலங்கைப் படைகளும், இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.

காணாமல் செய்யப்பட்ட எம் குழந்தைகள் பால் கவனம் ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பிலும், துடிப்பிலும், தொடர்ந்து அமைதிவழி போராட்டங்களும், உணவு மறுப்புப் போராட்டங்களும் செய்து வருகிறோம். ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் எத்தனையோ வேண்டுகோள்கள் விடுத்தும் கூட, இலங்கை அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்தத் தமிழ்க் குழந்தைகள் பற்றிய விவரங்கள் ஏதும் தர மறுத்து வருகிறது.

இலங்கையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2016 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி வடக்கு மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம் நகரில் ஒரு பொது நிகழ்வில், “2009 மே மாதத்தில் போர் முடிவில் இலங்கை பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை.” என சொன்னார்.

எங்கள் குழந்தைகளும் உயிருடனில்லையோ என்று கவலைப்படுகிறோம். இவர்கள் இன்றிருந்தால் ஆகச் சிறு குழந்தைக்கு இப்போது கிட்டத்தட்ட பதினொரு வயதாகியிருக்க வேண்டும்.

ஐ.நா. மன்றத்தின் கட்டாயப்படுத்தப்படும் சட்டங்களின் (Enforced Act) விதப்புரைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இருக்கின்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சரத்துக்களுக்கு முரணாக எமது குழந்தைகள் இலங்கை அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.  ஐ.நா நெறிமுறைகளுக்கு அமைவாக இது ஒரு அப்பட்டமான, மனித குலத்திற்கெதிரான குற்றமாக பார்க்கப்படுவதால் ஐ.நா உயர்ஸ்தானிகரும், ஐ.நா. சபையும் எமது குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நேரடியாக தலையிட்டு எமது குழந்தைகளை மட்டுமல்லாது இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் மீட்டுத்தருமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.

இப்போது நாம் இந்த அரசை நோக்கி எமது குழந்தைகளை மீட்டுத்தர வேண்டியோ அல்லது எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டியோ அல்லது அடிப்படை உரிமைகளுக்கான அமைதி வழி ஒன்று கூடலையோ செய்ய முடியாத அளவிற்கு இராணுவப் புலனாய்வாளர்களாலும், அரச படைகளாலும் புதிய உயிர் அச்சுறுத்தல்களுக்குள் ஆட்பட்டுள்ளோம்.

நாம் அரச விரோதிகள் என்றும் பயங்கரவாதிகளென்றும் அச்சுறுத்தப்படுகின்றோம். தொலைபேசி மூலமான மிரட்டல்களை அரசபுலனாய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். எமது அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு தடைகளை விதிப்பதும்,உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை போலி புனைதல்கள் மூலம் வழக்கிட்டு கால வரையற்று சிறையிலடைக்கவும் கோட்டாபய அரசு முயற்சிக்கின்றது.<

இது ஐ.நா.சபையின் கட்டாயப்படுத்தப்படும் சட்டப்பிரிவுகளின் விதந்துரைகளின்படி”சட்டத்திற்கு புறம்பானவிதத்தில் துன்புறுத்தல், பயமுறுத்தல் மற்றும் பழிவாங்குதல் என வரைவிலக்கணப்படுத்துகின்றது. எனவே இதற்காக எமக்கான பரிகாரம் தான் என்ன? இந்தக் குழந்தைகள் அனைத்தையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதிலும், இனப்படுகொலைகளை செய்தது தொடர்பிலும் தற்போது இருக்கின்ற அரசுத்தலைமையே நேரடியாக பங்கேற்று செயற்படுத்தியிருந்தது. எனவே கறை படிந்த கைகளிடம் நீதி கோர முடியாது என்பதனால் ஐ.நா.மன்றத்திடமும், உலக சமுதாயத்திடமும் எமது குழந்தைகளை மீட்டுத்தருமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கின்றோம்.

எத்தனையோ தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் செய்யப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் செய்யப்பட்ட இருபத்தொன்பது (29) தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள், வலிந்து காணாமல் செய்யப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம்,பெயர் வயது ஆகியவை உள்ளிட்ட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.எங்கள் குழந்தைகள் எங்கே என்று கண்டுபிடிக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top