இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறார் என சி.வீ.கே.சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரான சி.வீ.கே.சிவஞானம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் செயற்படும் நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் நடவடிக்கையாக கட்சியின் இரு சிரேஷ்ட உறுப்பினர்கள் தொடர்பிலும், கட்சியின் இரு இடைநிலை உறுப்பினர்கள் தொடர்பிலும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்.

இதனடிப்படையில் இரு சிரேஷ்ட உறுப்பினர்களும் எதிர்காலத்தில் கட்சிக்கு முரண்பட்ட விதத்தில் கருத்திட வேண்டாம் எனவும், இரு இடைநிலை உறுப்பினர்களை ஒரு வருடம் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் கடந்த 6 ஆம் திகதிய கடித மூலம் அறிவித்திருந்தார்.

இவ்வாறு வழங்கிய கடிதம் அதிகாரம் உள்ளதா? பொதுச் சபை அல்லது கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெறப்பட்டதா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விமர்சனங்களின் மத்தியில் கட்சியில் இருந்து உறுப்பினர்களை இடை நிறுத்தும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உரியதா? அல்லது ஒருக்காற்றுக்குழுவுக்கு உரியதா? எனவும், இதற்கான அனுமதி யார் வழங்குவது? போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது குறித்த ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் எனப் பதிவுத் தபாலின் மூலம் கட்சியின் தலைமைக்கு சி.வீ.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.