News

முன்னாள் போராளிகள் தொடர்பாக ஜெனிவாவில் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக  அரசோ அல்லது பன்னாட்டு அமைப்புகளோ இதுவரை எந்ததொரு உதவிகளையும் செய்யவில்லை என ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர், கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனிவாவில்  நடைபெற்று வருகின்றது.

குறித்த கூட்டத்தொடர், எதிர்வரும் ஒக்டோபர் 07ம் திகதி வரை நடைபெறும். அந்தவகையில் மூன்றாவது வாரத்தில், மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள்  தொடர்பான பொது விவாதத்தில், இளம் தமிழ் மாணவர் என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரபாகரன் அர்சேனித்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத் தொடரில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன அழிப்பு நடந்து 11 ஆண்டுகள் முடிந்த பிறகு தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது. மோசமான மாற்றங்களை அடைந்துகொண்டிருக்கின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 1, 46,000 மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தமிழர் அரசியல் பகுதிகளையும், சமய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, இன அழிப்பு போர் நடைபெற்ற காலத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற தடை விதிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தொடர்ந்து போராடுகின்ற தாய்மார்கள், பேரினவாத இராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.

கடந்த 20 ஓகஸ்ட் 2020 அன்று அமலநாயகி அரசு உருவாக்கிய குண்டர் படையினரால் மட்டக்களப்பில் தாக்கப்பட்டார். இதுபோல் சில வாரங்களுக்குபின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கொண்டாடிய பிறகு செல்வராணி தம்பிராசாவை பாதுகாப்பு துறையினர் அழைத்து, விசாரணை நடத்தினர்.

மேலும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட 100க்கு மேற்பட்ட பெண்கள், தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள இராணுவத்தால் பாதிக்கப்பட்டனர். இராணுவம் தொடர்ந்து முன்னாள் போராளி குடும்பங்களை துன்புறுத்தி வருகின்றது. போர் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் முடிந்தும் அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ அவர்களது வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் செய்யவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top