அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வருவது இன்னமும் உறுதியாகவில்லை என அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இராஜாங்க செயலாளரின் விஜயம் தொடர்பாக வினவியவேளை மைக்பொம்பியோவின் விஜயம் குறித்து இன்னமும் உத்தியோகபூர்வமாக எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்தது என ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கான விஜயத்தின் பின்னர் மைக்பொம்பியோ இலங்கைக்கு சில மணிநேர விஜயத்தை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என வெளிவிவகார செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார் ஆனால் எம்.சி.சி சோபா உடன்படிக்கை குறித்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த விஜயம் இரத்துச்செய்யப்பட்டது என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.