News

இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு

 மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும்.

அத்துடன், இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தனது அறிக்கையில் கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க மறுத்ததன் மூலமும் ஜெனீவா தீர்மானத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டதன் மூலமும் ஏனைய நடவடிக்கைகள் மூலமும் தேசிய நடைமுறைகள் மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விலக்கப்படுதலை முடிவிற்குகொண்டுவருவதற்கான நேர்மையான முன்னேற்றத்திற்கான கதவுகளை அரசாங்கம் அடைத்துவிட்டது.

இந்த காரணத்திற்காக நான் சர்வதேச அளவில் பல்வேறுவகைப்பட்ட பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதியவழிவகைகள் குறித்து ஆராயுமாறு நான் மனித உரிமை பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன். எதிர்கால பொறுப்புக்கூறலிற்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவை அளிக்குமாறும் உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதி நடைமுறைகளிற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது.

கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கை தொடர்பில் இலங்கை எதிர்ப்பினை வெளியிட்டால், ஒரு மென்மைப் போக்கான அடிப்படையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இருப்பது வழமை.  ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக இலங்கை அரசினுடைய எதிர்ப்பினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம் நிராகரித்துள்ளதுடன், ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சுக்கு எதிராக ஒரு அறிக்கை 2009இன் பின்னர் வெளியாகியிருப்பது இதுவே முதல் தடவை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top