வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஜப்பானின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள புகுஷிமா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் புகுஷிமாவின் கடலோர நகரமான நிமி நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 55 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

A
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து நாட்டின் தென்மேற்கு பகுதி வரை உணரப்பட்டது. குறிப்பாக புகுஷிமா அருகே உள்ள மியாகி, இபராகி, டோச்சிகி, சைதாமா மற் றும் சிபா ஆகிய மாகாணங்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன.
உள்ளூர் நேரப்படி இரவு 11.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு மேல் நீடித்ததாக தெரிகிறது. இதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
புகுஷிமா மற்றும் மியாகியில் உள்ள சில நகரங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் புல்லட் ரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
மேலும் இந்த பயங்கர நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு மின் நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இ ன்று காலை பிரதமர் யோஷிஹிடே சுகா கூறும்பொழுது, புகுஷிமா, மியாகி மற்றும் பிற பகுதிகளில் பலர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது. எனினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என கூறினார்.
வரும் வாரங்களில் நிலநடுக்கம் ஏற்பட கூடிய ஆபத்துகள் உள்ளன என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.