News

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் வெள்ளப்பெருக்கு: மின் நிலைய வளாகங்களில் இருந்து 12 உடல்கள் மீட்பு!

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 12 பேரின் உடல்கள் மின்நிலைய வளாகங்களில் இருந்து நேற்று மீட்கப்பட்டன.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.
இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.
இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று 12 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 5 உடல்கள் தபோவன் சுரங்கத்தில் இருந்தும், 7 உடல்கள் பிற இடங்களிலும் மீட்கப்பட்டன. அவை அங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மீட்கப்பட்ட 12 உடலையும் சேர்த்து, இந்த பேரிடர் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்து விட்டது. அதேநேரம் இன்னும் 154 பேரை காணவில்லை. எனவே அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் என உயர்மட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். மேலும் மீட்கப்படுவோரில் யாரும் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஹெலிகாப்டர் ஒன்றும் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தால் சமோலி மாவட்டம் முழுவதும் தொடர் சோகம் நிலவி வருகிறது. மீட்பு பணி நடைபெறும் இடங்களில் மாயமானவர்களின் உறவினர்கள் முகாமிட்டு உள்ளதால் தொடர்ந்து பரபரப்பும் நிலவி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top