இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு: கொழும்பு ஐ.நா. அலுவலகத்துக்கு முன் போராட்டம்!

இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் நேற்று சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மற்றும் காணாமல்போன பெற்றோர்களின் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நா. அலுவலகம், பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர்களையும் கையளித்தனர்.
இலங்கையில் போரின்போது காணாமல்போன பொதுமக்கள் மற்றும் படையினர் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் பிரிட்டன் பிரதிநிதிகள் தேடிப் பார்க்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.