News

போராட்ட களத்தில் அருட்தந்தையர்களை மிரட்டும் பொலிஸார்!

மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜோசப் மேரி மற்றும் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த அருட்தந்தை ரொஹான் ஆகியோரை அங்கு வந்த பொலிஸார் மிரட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான காணொளியொன்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பிலும் ஐந்தாவது நாளாக இன்று தொடர்ந்து வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்துள்ள நிலையில் அருட்தந்தை ஜோசப் மேரி மற்றும் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த அருட்தந்தை ரொஹான் ஆகியோர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என அருட்தந்தையர்கள் வலியுறுத்தியும் கூட அங்கு வந்த பொலிஸார் தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top