News

  தொலைபேசியில் கோட்டா அச்சுறுத்தல்: பாதுகாப்பு கோரி பொலிஸ்மா அதிபரிடம் விஜேயதாச முறைப்பாடு!

 

 

கொழும்ப துறைமுக நகர ஆணைக்கழு சட்டமூலம் தொடர்பாக தெரிவித்த கருத்தின் பின்னணியில் தொலைபேசி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சுறுத்தும் வித்தில் உரையாடியதை அடுத்து தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி பொலிஸ்மா அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் இழிவான- கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தை சட்டமூலமொன்றின் ஊடாக சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்வாறு செய்வதன் ஊடாக சீனாவுக்கு சொந்தமான தனியான நாடாகவே துறைமுக நகரம் மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ச நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று தன்னை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி அச்சுறுத்தும் வகையில் மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீா்த்ததாக டாக்டர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

ஜனாதிபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் குறித்து விவாதிக்கவே அவர் அழைப்பதாக நான் கருதினேன்.

ஆனால் அவா் என்னைக் கடுமையாக அச்சுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினரான என்னை அவா் அச்சுறுத்தியமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

அவரது அச்சுறுத்தலால் எங்களுடைய சொந்த வாழ்க்கை, குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் அவா் கூறினார். இந்த அச்சுறுத்தல் குறித்து இலங்கை பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு கோப் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவேளை எனது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனது வீடு சுற்றிவளைக்கப்பட்டது. கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது எனவும் அவா் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் தனது வீட்டிற்கு வரும் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இராணுவம் கண்காணித்து பதிவு செய்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top