News

  இலங்கையைக் “கொரோனா” வதைக்க அரசின் சர்வாதிகாரச் செயலே காரணம் – சஜித் அணி கடும் கண்டனம்

 

 

இலங்கையைக் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாகத் தாக்க அரசின் சர்வாதிகாரச் செயல்களே காரணமாகும். அரசியல் தேவைகளை நிறைவேற்றவும் நெருங்கிய நண்பர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கொரோனாத் தொற்றைப் பயன்படுத்தும் அரசின் மனிதாபிமானமற்ற செயல்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“புத்தியை முதலில் இழந்தால், அழிவு இரண்டாவதாகப் பின்தொடரும் என்று ஒரு பழமொழி உண்டு. அரசின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து இதைத்தான் இன்று அது செய்து வருகின்றது. கொரோனாத் தொற்று நோயின் கட்டுப்பாட்டை அரசு இழந்துவிட்டது.

நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 30 இற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இன்று அரசு மிகத் துல்லியமான தகவல்களைக் கூட மறைத்து வருகின்றது. இது மிகப் பெரிய சோகமான நிலையாகும்.

அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கொரோனாத் தொற்றுநோயைத் தொடர்ந்து பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

கொரோனாவின் முதலாம் அலையின்போது அதன் தாக்கம் குறித்து அரசு கவலைப்படாமல் பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த நேரத்தில் செயற்பாட்டில் இருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டால் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுத்திய போதிலும், நாட்டில் ஆபத்து குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், நிலைமை அமைதியடைவதற்கு முன்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொற்று நோயின் இரண்டாவது அலை குறித்த அவதானங்களை சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், அதற்குரிய முன்னாயத்தமில்லாத அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற விரும்பியது.

கொரோனாவின் இரண்டாவது அலையை மறந்து, மூன்றாவது அலையின் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அரசு மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது.

உருமாறிய வைரஸ் பரவலுக்குரிய அவதானம் நாட்டுக்குள் உள்ளது எனச் சுகாதார தரப்பு எச்சரித்தபோதும், கொடிய உருமாறிய வைரஸ் பிறழ்வு பரவாமல் தடுப்பதற்கான ஒரு தனிமைப்படுத்தல் மையமாக நம் நாட்டை திறக்கவும் அரசு உக்ரைனியர்களுக்கு அழைப்பு விடுத்தது மாத்திரமல்லாது, இந்த நேரத்தில் இந்தியர்களைத் தனிமைப்படுத்தும் மையமாகவும் மாற்றியுள்ளது. இதன் விளைவுகளையே இன்று அனுபவிக்கின்றோம்.

அரசின் முதன்மைப் பொறுப்பு மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அல்ல என்பது இதுலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

நாட்டின் இறையாண்மைக்குக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் போர்ட்சிடட்டி சட்டமூலத்தை நிறைவேற்றுவதை விரைவுபடுத்துவதற்காக இந்த மாதம் 19/20 ஆகிய தினங்களில் அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டுகின்றது என்பதிலிருந்து இது தெளிவாகின்றது.

கொரோனாத் தடுப்பூசி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவே அரசு இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். மருத்துவமனைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே சபையைக் கூட்ட வேண்டும். ஆனால், அரசின் முன்னுரிமைகளில் இந்த விடயம் இடம்பெறாமை நாட்டின் துரதிஷ்டமே.

அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் நட்பு வட்டார பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் கொரோனாப் பரவலை அரசு பயன்படுத்துவதை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டாம் என்று சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விடுத்த கோரிக்கையை நிராகரித்த அரசின் ஜனநாயக விரோத நடத்தையை நாங்கள் கண்டிக்கின்றோம்.

கொரோனாத் தொற்று நோயின் மூன்றாவது அலை நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் தருணத்தில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து ஒரு சர்வாதிகாரி போல் செயற்படும் அரசின் இந்தச் செயலை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்” –  தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top