News

  ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இல்லம் அருகே தீவிரவாதிகள் தாக்குதல் 4 பேர் பலி; 10 காயம்!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பாதுகாப்பு அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். அத்துடன் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை உள்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சரின் வீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் அருகிலுள்ள குடியிருப்புக்களை இலக்குவைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தத் தாக்குதலில் தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா முகமதி தெரிவித்துள்ளார். எனினும் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் சிலர் காயமடைந்தனர்.

கார்க் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்து சரமாரியாகச் சுட்டனர் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மிர்வைஸ் ஸ்டான்க்சாய் தெரிவித்தார்.

தீவிரவாதிகளை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் ஸ்டான்க்சாய் கூறினார்.

கார் வெடிகுண்டு வெடித்து இரண்டு மணி நேரத்திற்குள், காபூலில் வேறொரு இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு தீவிர சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் இங்கு பதுங்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் அங்கு தேடுதல்கள் தொடர்வதாக காபுல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஃபெர்டாவ்ஸ் ஃபாரமர்ஸ் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிவிட்ட நிலையில் அங்கு தலிபான்கள் எழுச்சிகொண்டுள்ளனர். தலிபான்களின் தாக்குதலில் பல நகரங்கள் அவர்கள் வசம் வீழ்ந்துள்ளன. அத்துடன், ஆப்கானிஸ்தானில் 50 வீதத்துக்கு மேற்பட்ட பகுதிகள் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தற்போது ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஹெராட், லஷ்கர் காஹ் மற்றும் கந்தஹார் பகுதிகளுக்குள் நுழைந்துள்ள தலிபான்கள் இந்நகரங்களை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.

இந்த நகரங்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top