Canada

கனடா தோ்தலில் லிபரல் வெற்றி உறுதி; மீண்டும் சிறுபான்மை ஆட்சி அமைகிறது!

 

கனேடிய நாடாளுமன்றத் தோ்தலில் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.

பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கான தனது இலக்கை அடைய முடியாதபோதும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தெளிவான மக்கள் ஆணையை வென்றுள்ளதாக ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு முதல் ட்ரூடோ அதிகாரத்தில் உள்ளார். 2019-ஆம் ஆண்டு அவரது தலைமையில் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்டது.

எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அவர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்னும் இரண்டு வருட ஆட்சிக் காலம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டிய தோ்தலுக்கு ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

இன்னிலையில் நேற்று இடம்பெற்ற தோ்தலில் லிபரல் கட்சியினர் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் மூன்றாவது முறையாக வென்று கனடா பிரதமராக ட்ரூடோ பொறுப்பேற்கவுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் எதாவது ஒரு கட்சி 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். எனினும் ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.

கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சி 155இடங்களை மட்டுமே வென்று சிறுபான்மை அரசை அமைத்தபோதும் இம்முறை அதனை விட அதிக இடங்களை பெற்றுக்கொள்ளும் சாத்தியம் காணப்படுகிறது.

இன்னிலையில் அனைத்து கனடியர்களின் நலனுக்காக ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தோ்தல் முடிவுகளின் பின்னர் ட்ரூடோ உறுதியளித்தார்.

தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் எங்களிடம் ஆட்சியை கனேடியர்கள் ஒப்படைத்துள்ளனர். மில்லியன் கணக்கான கனடியர்கள் ஒரு முற்போக்கான திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் என செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரூடோ கூறினார்.

தேர்தலில் இதுவரை லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கன்சர்வேடிவ்கள் 121 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

அத்துடன், பிளாக் கியூபெகோயிஸ் 34 இடங்களிலும் என்.டி.பி. 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பசுமைக் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top