News

சிறிலங்கா மீதான இலக்கு வைக்கும் பொறிமுறை – முதிர்ச்சியற்றது என்கிறார் ஜீ.எல் பீரிஸ்

 

 

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்திலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணாக சிறிலங்காவை தேர்ந்தெடுத்து இலக்கு வைக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டிருப்பது முதிர்ச்சியற்றதும், பொருத்தமற்றதுமான செயல் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கி நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நியூயோர்க்கில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பெய்னைச் சந்தித்த சமயத்தில், அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான முன்னேற்றங்கள், தற்போதைய நிலவரத்தை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ள விடயத்தையும் அவர், சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர் நிறுவனங்கள் அவற்றின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான இடத்தையும் வாய்ப்பையும் அளிப்பது அவசியம் எனவும், இந்தப் பணியை மீறும் தற்காலிக வெளிப்புறப் பொறிமுறையொன்றை நிறுவுவது தேவையற்றதும், தீங்கு விளைவிக்கவல்லதும் ஆகும் எனவும் பேராரியர் பீரிஸ், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கடத்தல் ஒரு மனிதாபிமான துயரம் எனவும், இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மிகவும் அருமையான மற்றும் குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்தோர் இருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பெய்ன் இதன்போது கூறியுள்ளார்.

அமைச்சர் பீரிஸால் கோடிட்டுக் காட்டப்பட்ட பகுதிகளில், குறிப்பாக உளவுத்துறைப் பகிர்வு மற்றும் கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை அவர் வரவேற்றுள்ளார்.

சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அன்பான மற்றும் நட்புறவான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top