News

குற்றச்செயல்களில் சாட்சியங்கள் இல்லாதவர்கள் உள்ளே!குற்றவாளிகள் வெளியே – கஜேந்திரகுமார்

 

இந்த நாட்டில் நீதித்துறை பற்றிய மீளாய்வு நடப்பதில்லை. கொண்டுவரப்படும் திருத்தங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கொண்டுவருவதே பொருத்தமானதாக இருக்கும். மாறாக துண்டு துண்டாக கொண்டுவரப்படும் போது இவற்றுடன் தொடர்புபட்ட ஏனைய சட்டமூலங்கள் கவனிக்கப்படாமல் போகும் ஆபத்தும் உண்டு.

குற்றச்செயலில் ஈடுபட்டமைக்கான எவ்விதமான ஆதாரங்களும் இல்லாதவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் உள்ளவர்களோ விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் இருந்தும் உங்கள் பக்கமிருப்பதனால் அவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்திருக்கிறீர்கள். இதுதான் உங்களின் தண்டனை விலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தண்டனை குறைப்பு மற்றும் விலக்கு சட்ட திருத்தம் தொடர்பான விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ள உரை பின்வருமாறு,

இந்த விடயத்தை நீங்கள் சரிசெய்யாவிட்டால் எத்தனை திருத்தங்களைக் கொண்டுவந்தாலும் அவற்றிற்கு எதுவித அர்த்தமுமில்லை. இவ்விடயத்தில் சமூகங்கள் நம்பிக்கையிழக்குமேயானால் அவை சுயமாக இயங்கும் நிலைமை ஏற்பட்டு இது ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கும்.

நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தப் பிரேரணைகள் எமக்கு ஏற்புடையதாகவே உள்ளன. அவை பற்றி மேலதிகமாக கருத்துக்கூற வெண்டிய தேவை இல்லை. ஆனால் நீதியமைச்சரும் இந்த அவையிலிருப்பதனால், இவ்விடயம் தொடர்பில் பொதுவான சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலில் இத்திருத்தப் பிரேரணை கொண்டுவரப்படும் விதத்தில் உள்ள குறைப்பாட்டினைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குற்றவியல் சட்டக்கோவை மீதான திருத்தங்கள் துண்டு துண்டுகளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் சில நாட்களுக்கு முன்னர் இத்திருத்தச் சட்டமூலங்கள் பற்றிய குழப்பமிருந்தது. பகுதி பகுதியாக கொண்டுவரப்படும் இத்திருத்தங்களை நுணுக்கமாகப் பார்க்கும்போது அவை குழப்பகரமானதாக அமைந்துள்ளன.

எதிக்கட்சியினரும் குழப்பமடைந்திருந்தனர். கிரியல்ல அறிந்திருப்பார். இவற்றுடன் தொடர்புபட்ட திருத்தங்கள் எப்போது கொண்டுவரப்பட்டன என்று அறிந்துகொள்வதில் சிரமமிருக்கிறது. இதுபோன்ற குழப்ப நிலையிருப்பது நல்லதல்ல என்பதோடு இவை தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நீதித்துறை பற்றிய மீளாய்வு நடப்பதில்லை. கொண்டுவரப்படவிருக்கிற திருத்தச்சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, அதனை எதிர்ப்பதற்கு ஒரு வார கால இடைவெளியே உள்ளது.

அந்த ஒரு வாரகாலத்தை தவறவிட்டால் எல்லாமே அழிவடைய கூடிய சூழ்நிலை உருவாகும் நிலைமையை தவிர்க்க முடியாது. கொண்டுவரப்படும் திருத்தங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கொண்டுவருவதே பொருத்தமானதாக இருக்கும். மாறாக துண்டு துண்டாக கொண்டுவரப்படும் போது இவற்றுடன் தொடர்புபட்ட ஏனைய சட்டமூலங்கள் கவனிக்கப்படாமல்போகும் ஆபத்தும் உண்டு.

இந்த சட்டமூலங்கள் தொடர்பில் ஆட்சேபமிருப்பின் அவற்றைக் கொண்டுவருவதற்கும் இந்தக் கால இடவெளி போதுமானதல்ல. இரண்டாவது விடயம், குற்றவியல் சட்டக்கோவை தொடர்பிலான திருத்தங்களில் மரணதண்டனை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தத்தினை வரவேற்கலாம். ஆனால் மரண தண்டனை விடயத்தில் நாம் ஏன் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரமறுக்கிறோம்?

1976ம் ஆண்டிலிருந்து மரண தண்டனைச்சட்டத் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருந்து வருகின்றன. நல்லாட்சி அரசாங்க காலத்திற்கூட அதனை அமுல்படுத்துவதா இல்லையா என்ற குழப்பமான நிலையே காணப்பட்டது. மரண தண்டனையை அகற்றுவது தொடர்பாக நீதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய உலகில் மரணதண்டனை விதிப்பதன் மூலம் குற்றச் செயல்களை குறைக்க முடியாது என்பதனை நாம் அறிவோம். இவ்வாறு குற்றச் செயல்களை குறைக்கலாம் என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களும் இல்லை .இலங்கையைப் பொறுத்தவரை கூட மரண தண்டனை விதிப்பதன் மூலம் குற்றச்செயல்களைக் குறைக்கலாம் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

அந்தவகையில் இத்திருந்தங்கள் தொடர்பில் கருத்தில் எடுக்க வேண்டும். இலங்கையில் நீதித்துறையில் மிகவும் உள்ள சிக்கலான விடயம், தண்டனை விலக்கு வழங்குவதே. எல்லாச் சந்தரப்பங்களிலும் நீதித்துறை ஒரே விதமாகச் செயற்படக்கூடிய வகையில் அது பலப்படுத்தப்பட வேண்டும்.

நான் இந்த அரசாங்கத்தை மாத்திரம் குறைகூறவில்லை. கடந்த அரசாங்கம் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் தண்டனை விலக்கு வழங்கும் விடயத்தில் ஒரே விதமாகச் செயற்பட்டு வருகின்றன. தண்டனை விலக்கு வழங்கும் நடைமுறை உச்சத்தில் இருக்கும்போது, அது ஊக்குவிக்கப்படும் போது, நீதித்துறையில் கொண்டுவரப்படும் இந்த திருத்தங்கள் அனைத்தும் அர்த்தமற்றவையாக மாறிவிடும்.

இது வெறுமனே நீதித்துறைக்குச் சோடனை செய்வது போன்றதாகிவிடும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தை உதாரணத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இவ்விடயம் தொடர்பில், அமைச்சர் உடனடியாக பதிலளித்திருந்தமைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். அவர் பரிந்துரைத்த மூன்று நடவடிக்கைகள் தொடர்பில் எதுவும் நடக்கவில்லை. அதில் ஒரு பரிந்துரையாக. இரகசியப் பொலிஸார் விசாரணை நடத்தவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இன்று வரை இரகசியப் பொலிஸார் அங்கு சென்று எந்த விசாரணையும் நடத்தவில்லை. நீங்கள் இருபதாவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்தபோது, நீதித்துறைக்கு இருந்த மேற்பார்வை செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அகற்றப்பட்டு, நீதித்துறை முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டது.

அநுராதபுரம் சிறைசாலைச் சம்பத்துடன் தொடர்புபட்ட இராஜங்க அமைச்சர் தொடர்ந்து அமைச்சராகவே பணியாற்றுகிறார். சிறைச்சாலை அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுப் பதவிகளிலிருந்து அவர் அகற்றப்படவில்லை.

இதன்மூலம் நீதித்துறையிலிருக்கும் அதிகாரிகளுக்கு என்ன செய்தியினைச் சொல்ல விரும்புகிறீர்கள்? இவர்கள் மீது யாரும் கைவைக்க முடியாது என்பதனையா? குற்றச்செயல்களைச் செய்தார்கள் என்பதனை எல்லோரும் அறிந்திருந்த போதிலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தண்டனை விலக்கு விடயத்தில்தான் நீங்கள் தடுமாறுகிறீர்கள். சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பயங்கரவாதத் தடைச்சட்டம் மாற்றப்படுமேயானால், அச்சட்டத்தின் அடிப்டையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளையும் விடுவிக்க வேண்டியிருக்கும். ஒருவரைக் கூட தடுத்து வைத்திருக்க முடியாது.

தண்டனை வழங்கப்பட்டு சிறையிலிருக்கும் கைதிகளையும் விடுவிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் அந்தளவு கொடுமையான சட்டமாக அது இருக்கிறது. அதனால் அவர்கள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு எதிரான நீதி விசாரணை துரிதப்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என எமக்கு உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. குற்றச்செயலில் ஈடுபட்டமைக்கான எவ்விதமான ஆதாரங்களும் இல்லாதவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் உள்ளவர்களோ விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் இருந்தும் உங்கள் பக்கமிருப்பதனால் அவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்திருக்கிறீர்கள். இது தான் தண்டனை விலக்கு.

இந்த விடயத்தை நீங்கள் சரிசெய்யாவிட்டால் எத்தனை திருத்தங்களைக் கொண்டுவந்தாலும் அவற்றிற்கு எதுவித அர்த்தமுமில்லை. இவ்விடயத்தில் சமூகங்கள் நம்பிக்கையிழக்குமேயானால் அவை சுயமாக இயங்கும் நிலைமை ஏற்பட்டு இது ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top