கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று; மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை!

கனடாவில் கவலைக்குரிய புதிய ஒமிக்ரோன் உரு திரிபு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதும் மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரிப்புக்கு ஒமிக்ரோன் உரு திரிபு வழிவகுக்கும் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கனடியர்களும் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்று ஆதரிப்பதாக கனடிய மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று பரவல் அச்சத்தை அடுத்து அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் கனடா வரும் சர்வதேச பயணிகள் அனைவருக்கு விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனை கட்டாயம் என கனடா மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.
அத்துடன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் கனடா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
எந்தவொரு புதிய திரிபு புழக்கத்தில் இருந்தாலும், அதிக விழிப்புணர்வின் தேவை உள்ளது என தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதேவேளை, ரொரன்டோவில் முதன்முறையாக நேற்று வெள்ளிக்கிழமை 3 ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து கனடா திரும்பியவர்கள் என ஒன்ராறியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றொரு நபர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர் எனவும் அவா்கள் குறிப்பிட்டனர்.
ஒமிக்ரோன் திரிபு பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் கனடா முழுவதும் மீண்டும் தொற்று நோயாளர் தொக உயரத் தொடங்கும் என என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறினார்.
இதேவேளை, கொவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் 10 இலட்சம் பைசரின் வாய்வழித் தடுப்பு மருந்தை வாங்க பைசர் மருந்தாக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.