News

ஈராக்கில் ராணுவ முகாம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கியதில் 11 வீரர்கள் பலி

 

 

ஈராக்கில் ராணுவ முகாம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 11 வீரர்கள் பலியாகினர்.

ஈராக் மற்றும் சிரியாவை புகலிடமாக கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர். இதை தொடர்ந்து, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது படைகளை குவித்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை தொடங்கியது. இதில் 2017-ம் ஆண்டு இறுதியில் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.

எனினும், குறுகிய காலத்திலேயே அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்க தொடங்கியது. குறிப்பாக தலைநகர் பாக்தாத் மற்றும் அதன் அருகில் உள்ள தியாலா மாகாணம் உள்ளிட்ட சில இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருகி வருகிறது. அங்கு அவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பாக்தாத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் தியாலா மாகாணத்தின் அல் ஆசிம் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் மிகப்பெரிய ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த ராணுவ முகாமை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் ராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயத்தில் பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றி விட்டு தப்பி ஓடினர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 11 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது ஈராக்கில் சமீபத்திய மாதங்களில் ராணுவ வீரர்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மிகவும் மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, அல் ஆசிம் மாவட்டத்தில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top