News

பிரித்தானியா இலங்கை தொடர்பில் எடுக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது -வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் !

 

 

இலங்கையில் நீண்ட காலமாகத் தீர்வு வழங்கப்படாமல் தொடர்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் பிரித்தானியாவில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டின் மௌனமும்,

இலங்கையுடனான  தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவர் முன்னுரிமை வழங்கியுள்ளமையும் கடும் கண்டனத்திற்குரியவையாகும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அது மாத்திரமன்றி சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானியா அரசாங்கம் உதவவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், அச்சங்கத்தின் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 11-01-2022 ஆம் திகதி செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

அது மாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண, கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார்.

இந்த சந்திப்புக்கள் தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளால் அமைச்சர் தாரிக் அஹமட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த 13 ஆண்டுகளாக மிகவும் அவமரியாதைக்குரிய வகையில் நடத்தப்பட்டு வருகின்ற அதேவேளை, நீங்கள் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் பேசுகின்றீர்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் மீதான கருணையின்றி, தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் அரசாங்கத்துடனான தொடர்புகளைப் பேணுவதற்கே நீங்கள் முன்னுரிமை அளிக்கின்றீர்கள் என்பது நீங்கள் வெளியிட்ட கட்டுரையின் மூலம் தெளிவாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் அதிகளவிலான காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

எனினும் இலங்கையில் மிகமுக்கிய பிரச்சினையாகக் காணப்படக்கூடிய வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அந்தக் கட்டுரையின் எந்தவொரு இடத்திலும் நீங்கள் பிரஸ்தாபிக்கவில்லை அல்லவா?

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரின்போது, அன்பிற்குரியவர்களை இழந்த தமிழ்க்குடும்பங்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்.

ஜெனீவா பொறிமுறையின் ஊடாக கடந்தகால சம்பவங்களை அணுகுவதற்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

அதேவேளை மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top