News

“அதிகாரப் பகிர்வு” என்பது தமிழர்களின் நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய அம்சம்- மீண்டும் வலியுறுத்தல் விடுத்துள்ள இந்தியா!

அதிகாரப் பகிர்வை வழங்கும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரிவரும் தமிழ் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவிற்கு இந்தியா மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை புது டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்றைய தினம் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என  தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் சிறிலங்காவுடன் துணை நிற்கும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையின் மூலம் கையாளவும், IMBL (சர்வதேச கடல் எல்லைக் கோடு) சம்பவங்களைக் கையாள்வதில் வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரதும் நீண்டகால ஒருமித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது “அதிகாரப் பகிர்வு” என்பது தமிழர்களின் நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய அம்சம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top