News

இரண்டாம் நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அரசியல் கைதிகள்!

 

 

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 3 தமிழ்க் கைதிகள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று (24) இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது.

எமக்கு நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டோம் என கைதிகள் தெரிவித்ததையடுத்து உறவினர்களும் அவர்களுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கைதிகளின் உறவுகள் நேற்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று தனது அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தொடர்பு கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை சிறையில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

 

 

இந்நிலையில் ஆளுநரின் வாக்குறுதியை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு தெரிவித்த போது அதனை ஏற்க மறுத்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்ததையடுத்தே அரசியல் கைதிகளின் உறவுகளும் மீண்டும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top