News

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவை கைப்பற்றியதாக ரஷியா அறிவிப்பு

 

 

இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா, போரை தொடங்கியது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.

உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இந்த ஆக்ரோ‌ஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோ‌ஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அண்டை நாடுகளின் எல்லையை நோக்கி செல்கிறார்கள். அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது.

தலைநகர் கீவ்வில் சண்டை நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணி வரை இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவத்தினருக்கு அதிபர் புதின் திடீரென்று நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார். இதனால், தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ரஷியாவில் உள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரு பெரிய நகரங்களை சுற்றிவளைத்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை ரஷியா கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,  கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறும்போது, ‘‘ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கீவில் எரிவாயு குழாயை வெடிக்க செய்துள்ளனர். கடுமையான புகை மூட்டம் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.  இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடும். இதனால் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களை ஈரமான துணியால் மூடிவைக்க வேண்டும். நிறைய திரவங்களை குடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top