News

உக்ரைன் பதற்றம்; அமைதியான வழியில் தீர்வு காண வாய்ப்பு! புதினை சந்தித்த பின் பிரான்ஸ் அதிபர் பேட்டி

 

உக்ரைன் மோதலை தணிக்க வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என்று மேக்ரான் கூறினார்.

உக்ரைன் விவகாரத்தில் அமைதியான வழியில் தீர்வு காணுவதற்கு வாய்ப்பு உள்ளதாக, ரஷிய அதிபர் புதினுடனான சந்திப்புக்கு பின் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லை அருகே ஒரு லட்சம் படை வீரா்களை ரஷியா நிறுத்திவைத்திருக்கிறது. உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷியா படையெடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. ரஷியா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் படை வீரர்கள் மற்றும் தளவாடங்களை தொடர்ந்து எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சா்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று முன்தினம் ரஷியா சென்று அந்த நாட்டின் அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.உக்ரைனுடனான பதற்றம் தொடங்கியதற்கு பிறகு புதினை நேரில் சந்தித்த முதல் ஐரோப்பிய தலைவர் மேக்ரான் ஆவார். இதனால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்தனர்.அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மேக்ரான் பேசியதாவது:-

நாம் அனைவரும் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மைக்கான பாதையை கண்டுபிடிக்க வேண்டும். இப்போது அதற்கான, வாய்ப்பும் நேரமும் உள்ளது. ரஷியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நிலைமையை உறுதிப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளில் உடன்பட வேண்டும், மேலும் ரஷியாவும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதங்களில் கூட்டாக செயல்பட வேண்டும்.

உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய துருப்புக்களின் இருப்பு குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பதற்றமாக இருக்கிறார். உக்ரைன் மோதலை தணிக்க வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும் இவ்வாறு மேக்கரான் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய புதின், உக்ரைன் விவகாரத்தில் மேக்ரானின் கருத்துகளுடன் தான் உடன்படவில்லை என கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில் “உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை ரஷியா மீறியது என்ற மேக்ரானின் நிலைப்பாடு மிகவும் தவறானது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “2014-ல் உக்ரைனில் நடந்த ஆட்சி கவிழ்ப்பை மேற்கத்திய நாடுகள் ஆதரித்தது ஏன். ஆரம்பத்தில் கிரிமியாவின்(உக்ரைனின் மேற்கு பகுதி) ஆட்சி அதிகாரம் பலத்தால், ஆயுதங்கள் மூலம் இரத்தத்தால் கைப்பற்றப்பட்டது. இந்த நிலைமைகளின் கீழ், கிரிமியாவில் வாழ்ந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டது” என கூறினார்.

அதே சமயம் உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததற்காக மேக்ரானை அவா் பாராட்டினாா்.

இதனிடையே இந்த மத்தியஸ்த முயற்சியின் அடுத்த கட்டமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஷோல்ஸ் அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் ரஷியாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் ‘நார்டு ஸ்ட்ரீம் 2′ என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என எச்சரித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top