News

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் – புதினை எச்சரித்த பைடன்

 

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என புதினுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கும் ஆதரவளிப்போம் என நேட்டோ மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேவேளை உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்து வருகிறது. ஆனால், ரஷியா போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் (பிப்.20) உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருவது தொடர்பாகவும், அதிகரிக்கும் போர் பதற்றம் தொடர்பாகவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் வீடியோ கால் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் மீது படையெடுத்தால் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் உடனடியாக எதிர்வினையாற்றுவோம் என ரஷிய அதிபர் புதினிடம் ஜோ பைடன் கூறினார். மேலும், உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் எனவும் புதினை பைடன் எச்சரித்தார்.

மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு மிகப்பெரிய அளவில் மனித பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், உலகில் ரஷியாவின் நிலை மங்கிவிடும் எனவும் புதினிடம் பைடன் கூறினார்.

இந்த விவகாரத்தில் ராஜாங்க ரீதியில் தீர்வுகான முயற்சிகள் நடைபெற்று வரும் போதும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் புதினிடம் பைடன் கூறியுள்ளார்.

1 மணி நேரத்திற்கு மேல் பைடன் – புதின் இடையே இந்த பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. ஆனாலும், புதினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உக்ரைன் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top