News

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில் போலத்துக்கு 250 யுத்த டாங்கிகளை விற்கும் அமெரிக்கா!

 

 

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் கிழக்கு ஐரோப்பாவில் தனது முக்கிய கூட்டாளியான போலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு 250 அதிநவீன ஆப்ராம்ஸ் டாங்கிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அண்டை நாடான பெலாரஸில் ஆயிரக்கணக்கான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் தமது நாட்டின் பாதுகாப்பு குறித்து போலந்து தலைவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பெலாரஸூடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியின் போர்வையில் உக்ரைனைச் சுற்றி ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ளன.

ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போலந்துக்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், போலந்து எல்லையில் இருந்து 200 மைல்கள் (321 கி.மீ.) தொலைவில் ரஷ்யப் படைகள் நிலைகொண்டுள்ளதாக கூறினார்.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் இது போலந்திலும் நெருக்கடிகளை உருவாக்கும். போலந்து பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த உக்ரேனியர்களை சமாளிக்க வேண்டி ஏற்படும். அத்துடன் எல்லையிலும் சவால்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5,000 கூடுதல் அமெரிக்க துருப்புக்கள் போலந்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன், கூடுதல் போர் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே 250 அதிநவீன ஆப்ராம்ஸ் டாங்கிகளை போலந்துக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஆப்ராம்ஸ் யுத்த டாங்கிகள் உலகத் தரம் வாய்ந்த அமெரிக்க தயாரிப்பாகும். இது அதிநவீன பீரங்கிகளையும் கொண்டுள்ளது. எதிரிகளின் கவச வாகனங்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களையும் இது தாக்க வல்லது என இதன் உற்பத்தியாளரான ஜெனரல் டைனமிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த யுத்த டாங்கிகளை வழங்குவது போலந்து ஆயுதப் படைகளுடனான நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தும். எங்கள் ஒருங்கிணைந்த இராணுவ பலத்தை அதிகரிக்கும். அத்துடன், நேட்டோ நட்பு நாடுகளின் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

போலந்தின் தென்கிழக்கு எல்லையானது மேற்கு உக்ரேனிய நகரமான லிவிவ் நகருக்கு அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top