News

கிழக்கு ஐரோப்பாவுக்கு 3000 வீரர்களை அனுப்பிய அமெரிக்கா – ரஷ்ய அரசு கண்டனம்

கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளுக்கு உதவ 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதே சமயம் போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளுக்கு உதவ 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜெர்மனியில் இருந்து 1000 அமெரிக்க வீரர்கள் ரூமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் இருந்து 2000 ஆயிரம் வீரர்கள் ஜெர்மனி, போலந்துக்கு புறப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஐரோப்பியாவுக்கு படைகள் அனுப்பப்படும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதிபர் ஜோபைடன் கூறும்போது, ‘ரஷிய அதிபர் புதின் ஆக்ரோ‌ஷமாக செயல்படும் வரை கிழக்கு ஐரோப்பியாவில் எங்களின் நேட்டோ நட்பு நாடுகளுக்கு நாங்கள் அங்கு இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பியாவுக்கு படைகளை அனுப்பியதால் அமெரிக்காவுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய துணை வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் க்ருஷ்கோ கூறும்போது ‘அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை கடினமாக்கும். ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் இந்த செயல் அழிவுக்கான நடவடிக்கை அரசியல் ரீதியான முடிவுகளுக்கான வாய்ப்புகளை இது குறைக்கும்’ என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top