News

சிறிலங்காவின் நடக்கும் கொடூரங்களை பற்றி வாய்திறக்காத பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட்! எழுந்த கடும் கண்டனம்

 

 

அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சரும் பிரபுவுமாகிய அஹமட் சிறிலங்காவில் தொடரும் சட்டவிரோதமான கைதுகளும் தடுத்துவைப்புக்களும் சித்திரவதைகளும் காணாமற்போதல்களும் பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்க தவறியமையை கண்டித்து, தமிழ் அரசியல்வாதிகள் பலர் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலதிக ஆதாரங்களை வழங்க நேரில் சந்திப்பதற்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

தெற்கு, மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் மோதல்களின் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான தாரிக் அஹமட் பிரபு (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் செய்து சிறிலங்காவின் அரச தலைவர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் என குறிப்பிட்ட சிலரை சந்தித்திருந்தார்.

தாம் எழுதிய கடிதத்தில் சிறிலங்கா காவல்துறைக்குப் பயிற்சி வழங்கும் நடவடிக்கையினை ஸ்கொட்லாந்துக் காவல்துறை நிறுத்தியதை வரவேற்றுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், இம்முடிவில் மாற்றம் இருக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன் அண்மையில் சிறிலங்கா காவல்துறையின் தடுப்பில் நடந்த சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் உள்ள தமக்கு அங்கு நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி வெளிப்படையாகக் கதைப்பதற்கு சுதந்திரம் இல்லை என்றும், வெளிநாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களே இச்சம்பவங்கள் பற்றி அச்சமின்றி செய்திவெளியிடும் நிலைமையே இப்போது காணப்படுவதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்மான முறையில் கைதுசெய்யப்படுவது, கடத்தப்படுவது, சட்டத்திற்கு மாறாக தடுத்துவைக்கப்படுவது பற்றிய முறைப்பாடுகள் தொடர்ச்சியாக தமக்குக் கிடைப்பதாகவும், அது மட்டுமன்றி பல தமிழ் இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும் பின்னர் மரணமடைவதும் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களும் தமக்குக் கிடைப்பதாகவும் அவர்கள் அம்மடலில் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்படுகவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்றும், போர் நடந்த காலத்தில் அவர்களில் பலர் பதின்மவயதைக்கூட எட்டியிருக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றிச்சார்ட் பதியுதீனின் ருவிட்டர் பதிவை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமையும் எங்கள் உரிகைளுக்காக அமைதிவழி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமையும் சமூக ஊடகங்களில் போரில் இறந்தவர்களைப் பற்றிய பதிவுகளைப் பகிர்ந்தமையும் பலர் கைதுசெய்யப்படுவதற்கு தூண்டுதலாக அமைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளனர் என்றும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மேலும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நினைவேந்தல்களில் பங்குபற்றியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டதையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அத்துடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பதுடன் அதனது உலகளாவிய நீதிஅதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எங்களது மக்கள் பலரை நாட்டைவிட்டுத் தப்பியோடி வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்குக் காணரமாக இருக்கும் தற்போதும் நடந்துகொண்டிருக்கும் மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி பிரித்தானியா பேசவேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இது தொடர்பான நேரடி வாக்குமூலங்கள், மேலதிக தகவல்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இது தொடர்பில் பிரித்தானிய அரசு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதற்கு உதவுவதற்கும், தாங்கள் தயாராக இருப்பதாவும், இதற்காக ஒரு சந்திப்பை நாங்கள் கோருகிறோம் என்றும் அக்கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதியரசரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தற்போதய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வன்னிமாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிமலநாதன், மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் ஆகியோருடன், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் யாழ்.மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலருமான அனந்தி சசிதரன் ஆகியோரும் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாராகிய சிவஞானம் சிறிதரனும் இதே கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் தடுப்பில் நடைபெற்ற சித்திவதைகளும் மரணங்களும், எழுந்தமானமான கைதுகள், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், காணாமற்போதல்கள், மர்மச்சாவுகள் என்பன பற்றிய தொடர் அறிக்கைகள், சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்கள், தூண்டுதலாக அமையும் காரணங்கள், முன்னாள் போராளிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை, இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் என பல்வேறு உப தலைப்புக்களில் இக்கடிதம் விரிவான விபரங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தலைப்புக்களுக்கீழும் ஊடகங்களில் வந்த சம்பவங்கள் ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளன. இவை ஊடகங்களில் பதிவான ஒருசில மனித உரிமை மீறல்களுக்கான உதாரணங்கள் மட்டுமே என்றும் இதுபோல இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

அத்துடன், நவம்பர் 2019 முதல் இன்றுவரையான காலப்பகுதியில், ஊடகங்களில் பதிவான, 809 மனித உரிமைமீறல்ச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்ட, 66 பக்கங்கள் கொண்ட விரிவான பட்டியலும் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top