News

தணியும் போர் பதற்றம்; உக்ரைன் எல்லையிலிருந்து படைகளை இன்று விலக்கத் தொடங்கியது ரஷ்யா!

 

உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் தங்கள் பயிற்சிகளை முடித்து இராணுவத் தளங்களுக்குத் திரும்பி வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷ்யா படையெடுப்பை எந்நேரமும் ஆரம்பிக்கலாம் என மேற்குலக நாடுகள் எச்சரித்து வந்த நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பதற்றங்களைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாடு முழுவதும் பெரிய அளவிலான பயிற்சிகள் தொடரும் அதே வேளையில், உக்ரைனை ஒட்டியுள்ள தெற்கு மற்றும் மேற்கு இராணுவ மாவட்டங்களின் சில பிரிவுகள் தங்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு தளத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் உக்ரைன் எல்லையில் இருந்து சில டாங்கிகள் உள்ளிட்ட கனரக போர் தளபாடங்கள் நகர்த்தப்படுவதை காண முடிகிறது.

இதேவேளை, எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே மாற்றத்தை நம்ப முடியும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே 100,000 துருப்புக்களைக் குவித்துள்ளது. இது உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்த அச்சத்தை தூண்டியுள்ளது.

இதனைவிட பெலாரஸுடனான மொஸ்கோவின் கூட்டுப் பயிற்சிகளும் பதற்றங்களை அதிகரித்துள்ளன. கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான கூட்டுப் பயிற்சி 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தப் பயிற்சியின் போர்வையில் உக்ரைன் கிட்டத்தட்ட ரஷ்ய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறும் அறிவிப்பை அடுத்து பங்குச் சந்தைகளின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனைத் தாக்கத் திட்டமிடவில்லை என்று மொஸ்கோ மறுத்தாலும் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணையாது என்ற சட்டபூா்வதாக உத்தரவாதத்தை அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கோரியுள்ளது. எனினும் அத்தகைய உறுதிமொழிகளை வழங்க நேட்டோவும் அமெரிக்காவும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top