News

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்!

 

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று(வியாழக்கிழமை) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது.

விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்குகின்ற ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் சட்டமாக இருக்கின்றது.

அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை.

ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை சீர்த்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்த்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது. அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தினையும் செய்யப் போவதில்லை.

ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தினை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது. அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடையஙங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் அந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோருகின்ற ஆவணத்தினை கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்.

இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாக சென்று வீதி வீதியாக சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம். தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கையெழுத்து போராட்டத்தினை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது.

யாழில் நடைபெறுகின்ற மீனவர்களின் போராட்டத்தினை கருத்தில் கொண்டு அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தினை முழு வீச்சாக செயற்படுத்துவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top